நெல்லை மாவட்டத்தில் திமுக கோஷ்டி மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில், ஸ்டாலின் மற்றும் உதயநிதியின் படங்களுடன் கூடிய டிஜிட்டல் பேனரை திமுகவினரே கிழித்து எறிந்துள்ளனர்.
நெல்லை மாவட்ட திமுக வர்த்தக அணி அமைப்பாளராக இருப்பவர் ஏ.ஆர். ரகுமான். இவரும் இவரது ஆதரவாளர்கள் சிலரும் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டணம் முத்தாரம்மன் தசரா திருவிழாவிற்கு செல்லும் பக்தர்களை வாழ்த்தி, ராதாபுரம் தொகுதி முழுவதும் டிஜிட்டல் பேனர் வைத்துள்ளனர்.
இதனை பொறுத்துக்கொள்ள முடியாத நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், ராதாபுரம் கிழக்கு ஒன்றியச் செயலாளருமான விஎஸ்ஆர் ஜெகதீஸ் ஆதரவாளர்கள், விஜயாபதி அடுத்துள்ள தாமஸ் மண்டபம் சந்திப்பில் உள்ள டிஜிட்டல் பேனரை கிழித்து எறிந்துள்ளனர். இது குறித்த காட்சி அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
இதேபோல, பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த ஸ்டாலின் மற்றும் உதயநிதி படங்களுடன் கூடிய டிஜிட்டல் பேனர்களை கிழித்து எறிந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து ஆவேசம் அடைந்த ஏஆர் ரகுமான் கூடங்குளம் போலீசாரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் விசாரணை நடைபெறுகிறது.