சரஸ்வதி பூஜையையொட்டி திருவாரூர் ஸ்ரீ சரஸ்வதி அம்மன் ஆலயத்தில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தென்னிந்தியாவிலேயே சரஸ்வதி தேவிக்கென்று தனி கோயில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள கூத்தனூர் பகுதியில்தான் அமைந்துள்ளது. புலவர் ஒட்டக்கூத்தர் சரஸ்வதி தேவியை துதிபாடி ஆராதனை செய்த சிறப்புமிக்க ஸ்தலமாக இந்த கோயில் போற்றப்படுகிறது.
ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை தினங்களை முன்னிட்டு இக்கோயிலின் மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சரஸ்வதி தேவிக்கு இன்று மகா அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் குவிந்த திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தேவியை மனமுருகி வழிபட்டனர்.
இக்கோயிலுக்கு வந்து சரஸ்வதி தேவியை வழிபடுவோர், கல்வி உட்பட அனைத்து விதமான கலைகளிலும் மேன்மை பெறலாம் என, கோயிலின் தலைமை குருக்கள் சங்கர் தெரிவித்தார்.