நாட்டு மக்கள் அனைவரும் இந்துக்களாக கருதி சொந்தங்களாக வாழ்ந்து வருவதாகவும், மாநில எல்லைகள் நமக்குள் எந்தப் பிரிவையும் உருவாக்க முடியாது எனவும் ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் சுரேஷ் பையாஜி ஜோஷி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் விஜயதசமியையொட்டி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் சுரேஷ் பையாஜி ஜோஷி கலந்து கொண்டார். பின்னர் பேசிய அவர், பிறப்பின் அடிப்படையில் சாதி எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது என கேள்வி எழுப்பினார்.
ஹரித்வார் எந்த சாதியைச் சேர்ந்தது என்று யாராவது சொல்ல முடியுமா என வினவிய அவர், 12 ஜோதிர் லிங்கங்கள் எந்த சாதியைச் சேர்ந்தவை என கேள்வி எழுப்பினார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள 51 சக்தி பீடங்கள் எந்த சாதியைச் சேர்ந்தவை என வினவிய அவர், நாட்டு மக்கள் அனைவரும் இந்துக்களாக கருதி சொந்தங்களாக வாழ்ந்து வருவதாக தெரிவித்தார்.
மாநில எல்லைகள் நமக்குள் எந்தப் பிரிவையும் உருவாக்க முடியாது எனக்கூறிய அவர், பிறப்பின் அடிப்படையிலான விஷயங்கள் நம்மைப் பிரிக்க முடியாது என குறிப்பிட்டார். மேலும், சாதி தொடர்பான தவறான கருத்துகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.