திருச்சியிலிருந்து மயிலாடுதுறை மார்க்கமாக தாம்பரத்திற்கு இன்று முதல் சிறப்பு ரயில் இயக்கப்படும் நிலையில், மயிலாடுதுறை ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருச்சியிலிருந்து மயிலாடுதுறை மார்க்கமாக தாம்பரத்திற்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டும் இயங்கும் வகையில் மூன்று மாதங்களுக்கு புதிய சிறப்பு இன்டர்சிட்டி ரயிலை தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்தது.
இன்று முதல் ரயில் சேவையானது துவங்கிய நிலையில் திருச்சியில் காலை 5.35 மணிக்கு புறப்பட்ட ரயில், தஞ்சாவூர், கும்பகோணம் மார்க்கமாக மயிலாடுதுறைக்கு காலை 7.30 மணிக்கு வந்தடைந்தது. ரயில் நிலையத்தின் முதல் நடைமேடைக்கு வந்த ரயிலுக்கு ரயில் பயணிகள் சங்கத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஓட்டுநர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்ததோடு பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சியில் இருந்து காலை 5.35 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மயிலாடுதுறை , விழுப்புரம் மார்க்கமாக தாம்பரத்திற்கு மதியம் 12.30 மணிக்கு சென்றடையும்.
தொடர்ந்து தாம்பரத்தில் மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் , மயிலாடுதுறை வழியாக திருச்சிக்கு இரவு 11.35 மணிக்கு ரயில் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.