ரயில் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாக, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே தண்டவாளத்தில் சரக்கு ரயில் ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது, ஆந்திரா நோக்கி சென்று கொண்டிருந்த மைசூரு-தர்பங்கா விரைவு ரயில், எதிர்பாராத விதமாக சரக்கு ரயில் மீது மோதியது. இதில், பயணிகள் ரயிலின் 11 பெட்டிகள் தடம்புரண்டுது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற தேசிய பேரிடர் மீட்புப்படையினர் துரித கதியில் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு உதவ அப்பகுதி மக்களும் முன்வந்தனர். விபத்தில் படுகாயமடைந்த 19 பயணிகள் மீட்கப்பட்டு சென்னை ஸ்டான்லி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்து நிகழ்ந்த இடத்தில் நடைபெற்ற மீட்பு பணிகளை திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாதிக்கப்பட்ட பயணிகளை தங்க வைக்க 3 திருமண மண்டபங்கள் ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறினார். தீ முழுவதும் அணைக்கப்பட்டு விட்டதாகவும், யாருக்கும் பெரியளவில் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவித்தார். , இந்த ரயில் விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாக, எஸ்.பி. சீனிவாச பெருமாள் தெரிவித்தார்.