பாரதத்தின் பல தலைமுறைகள் செழிக்க ஆர்எஸ்எஸ் அமைப்பு துணையிருக்க வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், தேச ஒருங்கிணைப்பு, பாதுகாப்பு, அனைத்துத் தரப்பு மக்களும் சரிசமம் என்ற சமத்துவ சமுதாயம் என உயரிய கொள்கைகளுடன் இயங்கி வரும் ஆர்எஎஸ்எஸ் இயக்கம்
, விஜயதசமி தினமான இன்று, நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.
கடந்த 1925 ஆம் ஆண்டு, விஜயதசமி நன்னாளில் தொடங்கப்பட்ட பேரியக்கம், இத்தனை ஆண்டுகளாகத் தேச நலனுக்காகவும், நாட்டு மக்கள் நல்வாழ்வுக்காகவும், தொடர்ந்து தளர்வின்றி இயங்கி வருவது, தன்னலமின்றி உழைக்கும் லட்சக்கணக்கான தொண்டர்களால் மட்டுமே இது சாத்தியமாகியிருக்கிறது.
சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் தொடங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று, நாட்டிற்குச் சுதந்திரம் பெற வேண்டும் என்பதாகும், ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் அதில் பங்கேற்றது மட்டுமின்றி, அதற்காக தங்கள் இன்னுயிரையும் தியாகம் செய்தனர்.
இயக்கத்தின் நிறுவனரான அமரர் டாக்டர். ஹெட்கேவார், தேச விடுதலைக்கான போராட்டத்தில் பல முறை சிறை சென்றவர். சுதேசி இயக்கத்திலும், காந்தியடிகளின் வெள்ளையனே வெளியேறு போராட்டத்திலும், ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பங்கு முக்கியமானது.
இந்த நூறு ஆண்டுகளாக, இயற்கை சீற்றங்கள், அவசரக்காலங்கள், விபத்துக்கள் எனப் பொதுமக்களுக்காக உடனே களமிறங்கிச் செயல்பட்டு வரும் அமைப்பு ஆர்.எஸ்.எஸ். எந்த ஒரு எதிர்பார்ப்புமின்றி, பொதுமக்கள் சேவையே நோக்கமாகக் கொண்டு இயங்கி வருவதால்தான், இன்றும் ஒரு பேரியக்கமாகச் செயல்பட்டு வருகிறது.
சமத்துவம், சமூக நீதி ஆகியவற்றின் பொருள், அனைவரும் சமம் என்று அறிவுப்பூர்வமாக ஏற்பது மட்டுமல்ல, உணர்வுப்பூர்வமாக அதனை ஏற்பதாகும். சமூக ரீதியாக ஒதுக்கப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவளித்து, நமது அன்றாட வாழ்க்கையில் சமூகநீதி பிரதிபலிக்கப்படுவதை உறுதி செய்ய ஆர்எஸ்எஸ் வலியுறுத்துகிறது.
விளிம்புநிலையில் உள்ள ஒடுக்கப்பட்டோரின் நலனைக் கருத்தில் கொண்டு ஒட்டுமொத்த சமுதாயமும் செயல்பட வேண்டும் என்பதையே ஆர்.எஸ்.எஸ் இயக்கம் வலியுறுத்துகிறது. நூறாவது ஆண்டிலும், இன்னும் இளமையோடும், துடிப்போடும், நாட்டு நலனுக்காகவும், பொதுமக்கள் ஒற்றுமைக்காகவும், தன்னலமின்றிச் செயல்பட்டு வரும் ஆர்.எஸ்.எஸ்.பேரியக்கம், மேலும் பல பல நூற்றாண்டுகள் சீரிய முறையில் தொடர்ந்து இயங்க வேண்டும்.
பாரதத்தின் பல தலைமுறைகள் செழிக்கத் துணையிருக்க வேண்டும் என்று வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அண்ணாமலை கூறியுள்ளார்.