திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே நடந்த ரயில் விபத்தின் எதிரொலியாக 12 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
கவரப்பேட்டை அருகே சரக்கு ரயில் மீது தர்பங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த ரயில் விபத்து தொடர்பாக உயர்மட்டக் குழு அமைத்து விசாரணை நடத்தி வருவதாக ரயில்வேத்துறை உயரதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த விபத்தின் எதிரொலியாக 12 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 7 ரயில்கள் மாற்றுப் பாதைகளில் இயக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சென்னையில் இருந்து விஜயவாடா, திருப்பதி என ஆந்திரா நோக்கி செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல, சென்னையில் இருந்து ஜோத்பூர், ஐதராபாத், விசாகப்பட்டினம் பகுதிகளுக்குச் செல்லும் ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன.
எதிர்பாராத இந்த அறிவிப்பு பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில் சேவைகள் தொடர்பாகவும், ரயில்கள் இயக்கப்படும் நேரம் தொடர்பாகவும் பல்வேறு குழப்பங்களுடனும், சந்தேகங்களுடனும் பயணிகள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.