தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பாபா சித்திக் கொல்லப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் பாபா சித்திக். அம்மாநில முன்னாள் அமைச்சரான இவர், மும்பை நிர்மல் நகரில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து வெளியே வந்து காரில் அமர்ந்தார்.
அப்போது அவரது காரை சுற்றி பட்டாசுகளை வெடிக்க செய்த மர்ம கும்பல், காரில் இருந்த சித்திக் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். உடலில் குண்டுகள் பாய்ந்து ஆபத்தான நிலையில் இருந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், பாபா சித்திக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள சரத்பவார், மகாராஷ்டிராவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருப்பது கவலை அளிப்பதாகவும், நாட்டின் நிதித் தலைநகரான மும்பையில் இதுபோன்ற சம்பவம் அரங்கேறியிருப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துவது மட்டுமன்றி பொறுப்பை ஏற்று அதிகாரத்தில் உள்ளவர்கள் பதவிகளில் இருந்து விலக வேண்டுமென வலியுறுத்தி உள்ளார். மேலும், பாபா சித்திக்கின் இறப்பிற்கு அவரது குடும்பத்தினருக்கு இரங்கலும் தெரிவித்துள்ளார்.