வங்கதேசத்தின் ஷியாம் நகரில் சத்கிரா மாகாளி ஜெஷோரேஷ்வரி கோயிலுக்கு பிரதமர் மோடி பரிசாக வழங்கிய தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளியாலான கிரீடம் திருடப்பட்டுள்ளது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்திய துாதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
வங்க தேசத்தின் தென்மேற்கு சத்கிரா மாவட்டத்தில் உள்ள ஈஸ்வரிபூர் கிராமத்தில் மாகாளி தேவியின் புகழ்பெற்ற ஜெஷோரேஸ்வரி காளி கோயில் உள்ளது.
ஆதி பராசக்தியின் 51 சக்தி பீடங்களில் இக்கோயிலும் ஒன்றாகும். அம்பிகையின் உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்கள் விழுந்த புனித தலமாக இந்த ஈஸ்வரிபுரம் உள்ளது. ஆதி பராசக்தி இன்றும் , இத்தலத்தில் ஜெஷோரேஷ்வரியாக வீற்றிருந்து அருள் புரிகிறாள்.
இந்த காளி கோயில், 12 ஆம் நூற்றாண்டில் அனாரி என்னும் அந்தணரால் கட்டப்பட்டதாகும். 100 திருக்கதவுகள் கொண்ட சன்னதியுடன் இந்த காளி கோயில் விளங்குகிறது. பிறகு 13 ஆம் நூற்றாண்டில் லக்ஷ்மண் சென்னால் புனரமைக்கப் பட்ட இந்த கோயில், பிறகு, 16 ஆம் நூற்றாண்டில் ராஜா பிரதிபதியா என்னும் மன்னனால் மீண்டும் கட்டப்பட்டுள்ளது. இந்தக்கோயிலில் , இறைவன் சந்தா என்று அழைக்கப்படுகிறார்.
கொரொனா தொற்று காலத்துக்குப் பின் பிரதமர் மோடி சென்ற முதல் வெளிநாட்டுப் பயணமாக வங்க தேச பயணம் அமைந்திருந்தது. 2021ம் ஆண்டு மார்ச் மாதம் தனது வங்க தேச பயணத்தின் போது பிரதமர் மோடி, இந்த புண்ணிய தலத்துக்குச் சென்று வழிபட்டார். கோவில் தரையில் அமர்ந்து மாகாளியை வணங்கினார்.
பக்தியின் வெளிப்பாடாக, இந்திய கைவினைஞர்களால் மூன்று வாரங்களுக்கு மேல் கையால் செய்யப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி கிரீடத்தை அம்மனுக்குக் காணிக்கையாக பிரதமர் மோடி வழங்கினார்.
மேலும், உள்ளூர் மக்களுக்குப் பயனளிக்கும் விதமாக, கோயிலில் பல்நோக்கு சமுதாயக் கூடம் கட்டுவதற்கான திட்டத்தையும் பிரதமர் மோடி அறிவித்தார். சமூக, மத மற்றும் கல்வி நிகழ்வுகளுக்கான இடமாக இந்த கோயிலைக் கருதிய பிரதமர் மோடி, இயற்கை பேரிடர்களின் போது தங்குமிடமாக செயல் பட்டு, அத்தியாவசிய பாதுகாப்பை இந்த மண்டபம் வழங்கும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில்ல, பாரம்பரிய சிறப்பு பெற்ற சிறப்பு ஜெஷோரேஷ்வரி கோயிலுக்கு பிரதமர் மோடி வழங்கிய அம்மன் கிரீடம் திருடு போயுள்ளது. கடந்த வியாழக் கிழமை, மதியம் பூஜையை , அன்றைய வழிபாட்டைத் நிறைவேற்றியபின் கோவில் குருக்கள் திலீப் முகர்ஜி கிளம்பிய பிறகு கிரீடம் திருடப்பட்டிருக்கிறது.
ஒருவர் கோயில் சன்னதிக்குள் நுழைந்து காளியின் சிரத்தில் இருந்து கிரீடத்தைத் திருடுவதைக் காட்டும் வீடியோவை, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதரகமும், அம்மனின் கீரீடத்தைத் கொள்ளை சம்பவத்துக்கு முறையான விசாரணையும், குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனையும் வழங்க வங்க தேச அரசை வலியுறுத்தி இருக்கிறது.
போராட்டங்களால், ஷேக் ஹசீனா ஆட்சி முடிவுக்கு வந்துபிறகு வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து உள்ளன. ஏற்கனவே இஸ்கான் கோயில் மற்றும் இந்திய கலாச்சார மையம் உட்பட பல இந்து கோவில்களுக்கு சேதப்படுத்தப்பட்டுள்ளன.
வங்க தேசத்தில் நடக்கும், இந்து சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள்,இந்து கோயில்கள் மற்றும் இந்திய வணிக நிறுவனங்கள் மீதான தாக்குதல்களை, அரசு உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், “சட்டம் மற்றும் ஒழுங்கு முறையாக பின்பற்றப்படும் வரை, இந்தியா அக்கறையுடன் கவனித்து வருவதாகவும் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.