வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் தங்கமாபட்டி பகுதியில் விடிய விடிய கனமழை பெய்ததால் ரயில்வே சுரங்கப் பாதை மழைநீரில் மூழ்கியது. இதன் காரணமாக கருஞ்சீரானூர், கிணத்துப்பட்டி, திட்டியூர், சிப்பவள்ளி உள்ளிட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தண்ணீரை மின்மோட்டார்கள் கொண்டு அப்புறப்பத்தி வரும் மக்கள், மாற்றுப் பாதையை ஏற்படுத்தி தர வேண்டும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூரில் பலத்த மழையால் கிராமங்களை மழைநீர் சூழ்ந்தது. மாயனூரில் 72 மில்லிமீட்டர் மழை பெய்ததால் சங்கமலைப்பட்டி, கீழ் முனையனூர் உள்ளிட்ட கிராமங்களை மழைநீர் சூழ்ந்தது. மேலும் ஜெயங்கொண்டம் சாலையில் ஓடைநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் கிராமங்களை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே ஆபத்தான நிலையில் காணப்படும் மின் கம்பங்களை அதிகாரிகள் விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் மாவட்டம் பாலப்பட்டியில் அமைந்துள்ள தரைப்பாலத்தை மூழ்கியபடி தண்ணீர் செல்வதால் போக்குரவத்து பாதிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் அப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் நிரம்பின. அந்த வகையில் வேங்காம்பட்டி – லாலாபேட்டை இணைப்பு சாலையை மூழ்கியபடி தண்ணீர் செல்வதால் பொதுமக்கள் ஆபத்தான முறையில் சாலையை கடந்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்தது. கோத்தகிரி, குன்னூர், உதகை உள்ளிட்ட பகுதிகளில் மழையால் மலைச் சாலைகளில் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டப்படி வாகன ஓட்டிகள் சென்றனர்.