தேசியவாத காங்கிரசின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் சுட்டு படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொலை செய்ய ஒரு மாதம் ஒத்திகை நடந்ததாக வெளியான பகீர் தகவல் குறித்து இந்த செய்தித்தொகுப்பில் பார்க்கலாம்.
மகாராஷ்டிராவில் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் பாபா சித்திக். அம்மாநில முன்னாள் அமைச்சரான இவர், மும்பை நிர்மல் நகரில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து வெளியே வந்து காரில் அமர்ந்தார்.
அப்போது அவரது காரை சுற்றி பட்டாசுகளை வெடிக்க செய்த மர்ம கும்பல், காரில் இருந்த சித்திக் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 4 தோட்டாக்கள் அவர் மீது பாய்ந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பாபா சித்திக்கை காப்பாற்ற மருத்துவர்கள் மிகவும் போராடியபோதும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்த கொலை தொடர்பாக ஹரியானாவைச் சேர்ந்த கர்னல் சிங், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தர்மராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். குடிசை மேம்பாட்டுத் திட்டம் தொடர்பான பிரச்னையில் பாபா சித்திக் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.
ஆனால் பாபா சித்திக் கொலைக்கு டெல்லியைச் சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோய் கேங்க் பொறுப்பேற்றுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள கர்னல் சிங் ஹரியானாவைச் சேர்ந்தவர். தர்மராஜ் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர். பாபா சித்திக் சம்பவ இடத்திற்கு வருவது குறித்து கொலையாளிகளுக்கு யாரோ தகவல் கொடுத்திருக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், கொலைக்கு முன், ஒரு மாதம் ஒத்திகையில் ஈடுபட்டதும், அவர்கள் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இதற்காக தலா 50 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டதாகவும் பகீர் வாக்குமூலத்தை அவர் கொடுத்துள்ளனர்.
பாபா சித்திக் நடிகர் சல்மான் கானுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். லாரன்ஸ் பிஷ்னோய் நடிகர் சல்மான் கானுக்கு ஓராண்டிற்கும் மேலாக தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்.
சல்மான் கானுக்கு யாரெல்லாம் நெருக்கமானவர்களோ அவர்கள் தங்களுக்கு எதிரி என்று லாரன்ஸ் பிஷ்னோயிக்கு மிகவும் நெருக்கமான ரோஹித் கோதாரா சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
தற்போது லாரன்ஸ் பிஷ்னோய் குஜராத் சிறையில் உள்ளார். ஆனாலும் லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது சகோதரர் அன்மோல் பிஷ்னோய் தொடர்ந்து தங்களது அடியாட்கள் மூலம் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தில் 700 அடியாட்கள் இருக்கின்றனர். அவர்களது செயல்பாடுகள் பஞ்சாப், ஹரியானா போன்ற வடமாநிலங்களில்தான் அதிகம்.