தீபாவளி பண்டிகையையொட்டி, தலைநகர் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புத்தாடைகள் மற்றும் அணிகலன்கள் வாங்க பொது மக்கள் குடும்பத்துடன் கடைகளுக்கு படையெடுத்தனர்.
தீபாவளி பண்டிகை வரும் 31-ம் தேதி கொண்டாப்பட உள்ளது. இதையொட்டி, சென்னை தி.நகர் ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை, பாண்டி பஜார் உள்ளிட்ட சாலைகளில் புத்தாடை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
புரசைவாக்கத்தில் உள்ள துணிக் கடைகளுக்கு காலை முதலே மக்கள் கூட்டம் கூட்டமாக வருகை தந்தனர். சென்னை புறநகர் பகுதிகளான மீஞ்சூர், பொன்னேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வண்ணாரப்பேட்டை, எம்சி சாலையில் உள்ள துணிக் கடைகளில் புத்தாடைகளை வாங்க குவிந்தனர்.
துணிக் கடைகளுக்கு இணையாக சாலையோர கடைகளிலும் துணிகள் மற்றும் அணிகலன்கள் விற்பனை படுஜோராக நடைபெற்றது. வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வருகை தந்தனர். இதனிடையே, முக்கிய பகுதிகளில் மெட்ரோ வேலை நடைபெற்று வருவதால் பொதுமக்கள் நடப்பதற்கே சிரப்பட்டனர்.