சிவகங்கை பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையில் அவசர அழைப்புகளை ஏற்கக்கூட ஆளில்லாத அவல நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்கவும், வேண்டிய உதவிகளைக் கோரவும் இந்த கட்டுப்பாட்டு அறையானது உருவாக்கப்பட்டது.
பொதுமக்கள் 1077 என்ற அவசர எண்ணில் தொடர்புகொண்டு புகார்களை தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், சிவகங்கை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் பொதுமக்கள் பல பாதிப்புகளை சந்தித்து வரும் நிலையில், நேற்று கட்டுப்பாட்டு அறையில் அவசர அழைப்புகளை ஏற்கக்கூட ஆளில்லாத அவலநிலை ஏற்பட்டது.
சிவகங்கை மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் சார்பில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையை 24 மணி நேரமும் இயக்க வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.