சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், மழைநீரை வெளியேற்றும் ராட்சத மோட்டார் பொருத்திய டிராக்டர்களுடன் செஞ்சியிலிருந்து சென்னை நோக்கி விவசாயிகள் அணிவகுக்கத் தொடங்கியுள்ளனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாகவும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளுவர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. இதனையடுத்து தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரை அகற்றும் வகையில் ராட்சத மோட்டார்கள் பொருத்திய 500 டிராக்டர்களை கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதற்காக விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், தங்களது டிராக்டர் வாகனத்தில் மோட்டார்களை பொருத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தயார் நிலையில் உள்ள டிராக்டர்கள் சென்னை ரிப்பன் மாளிகைக்கு கொண்டுவரப்படுகின்றன.
டிராக்டரில் நீர் உறிஞ்சும் மோட்டாரை பொறுத்த சுமார் 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு ஏற்படுவதாக தெரிவித்துள்ள விவசாயிகள், மழைநீரை வெளியேற்ற ஒரு மணி நேரத்திற்கு 600 ரூபாய் வீதம் வாடகை வாங்குவதாக தெரிவித்துள்ளனர். இதன் மூலம் குறிப்பிட்ட காலத்தில் கணிசமான வருவாய் கிடைக்கும் என்பதால், ராட்சத மோட்டார் பொருத்திய டிராக்டர்களுடன் விவசாயிகள் சென்னை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.