கடலூர் அருகே மின் கம்பி அறுந்து விழுந்த பகுதி வழியாக சென்ற 3 நாய்கள் மின்சாரம் தாக்கி அடுத்தடுத்து உயிரிழந்த வீடியோ காட்சிகள் காண்போரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோண்டூர் பகுதிக்குட்பட்ட பாப்பம்மாள் நகரில் மின் கம்பி அறுந்து விழுந்து தரையில் மின்சாரம் பாய்ந்துள்ளது.
அப்போது அந்த வழியாக சென்ற நாய் ஒன்று மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. பின்னர் மேலும் இரு நாய்களும் மின்கம்பி அறுந்து விழுந்த வழியாக சென்றுள்ளன. பொதுமக்கள் அவற்றை விரட்ட முயன்றபோதும், இரு நாய்களும் மின்சாரம் தாக்கி துடிதுடித்து உயிரிழந்தன.
அப்பகுதியில் மனித நடமாட்டம் இல்லாததால் நல்வாய்ப்பாக பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த மின்வாரியத்தினர், மின்சாரத்தை துண்டித்து மின்கம்பியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் மின்சாரம் தாக்கி நாய்கள் அடுத்தடுத்து உயிரிழக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி காண்போரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளன.