சென்னையில் தண்ணீர் தேங்கும் என கண்டறியப்பட்ட 50 இடங்களில் தற்காலிக கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகரில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், சென்னை மாநகரில் பருவமழையை எதிர்கொள்ள காவல்துறை தயார் நிலையில் உள்ளதாக சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.
தண்ணீர் அதிகமாக தேங்கும் என கண்டறியப்பட்ட 50 இடங்களில் சிறப்பு கட்டுப்பாட்டு அறைகளை அமைக்க அவர் உத்தரவிட்டுள்ளார். இது தவிர ஆயுதப்படையில் உள்ள பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற 300-க்கும் மேற்பட்ட காவலர்களும் தயார் நிலையில் உள்ளதாகவும், சிறப்பு பயிற்சி பெற்ற காவலர்களை 12 துணை ஆணையர் அலுவலகங்கள் மற்றும் 4 இணை ஆணையர் அலுவலகங்களுக்கு தனித்தனியே பிரித்தும் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும், காவல் நிலையங்கள் வாரியாக தனியாக கண்காணிப்பு குழுக்களும் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் காவல் ஆணையர் அருண் குறிப்பிட்டுள்ளார்.