கனமழை எதிரொலி காரணமாக பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள உத்தரவில், பள்ளிகளின் மின் இணைப்புகளை கண்காணிக்க வேண்டும் என்றும், பாதிப்பு ஏற்படுத்தும் மரக்கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
பேரிடர் காலங்களில் பள்ளிகளில் மக்களை தங்க வைக்க வசதியாக பள்ளி மற்றும் உணவுக் கூடங்களில் சாவி வைத்திருக்கும் பொறுப்பாளர் விவரங்களை வருவாய்த்துறை அலுவலர்களுக்கு அளிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
பள்ளி மேற்கூரைகளில் தண்ணீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பழுதான, பலவீனமான கட்டடங்களை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
பள்ளிகளின் சுற்றுச்சுவரின் உறுதித் தன்மையை கண்காணிக்க வேண்டும் என்றும்,
வகுப்பறை மற்றும் கழிப்பறைகள் பாதிக்கப்பட்டிருந்தால் அவற்றை பூட்டி வைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
கடலோர பகுதி அருகே உள்ள பள்ளிகளில் பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் இணைந்து தலைமை ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.