சென்னையில் நாளை அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறினார்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் ஆகிய 6 மாவட்டங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறினார்.