மழை முன்னெச்சரிக்கையாக மேம்பாலத்தில் கார்களை நிறுத்தியவர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது என, தாம்பரம் மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.
கனமழை எச்சரிக்கையால் சென்னை பள்ளிக்கரணை, வேளச்சேரி மேம்பாலங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதிப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பாக தாம்பரம் மாநகர காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. அதன்படி பாலத்தில் கார்களை நிறுத்தியவர்களுக்கு அபராதம் விதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் மாநகரில் உள்ள அனைத்து போக்குவரத்து காவலர்களுக்கும் கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், மழைக் காலத்தில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் அவர்கள் வசதிக்காக தாம்பரம் நகர போலீசார் கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவாலான வானிலையின்போது வாகனங்கள் பாதுகாப்பாகவும் வசதியாகவும் நிறுத்தப்படுவதை உறுதிசெய்யும் வகையில் அருகிலுள்ள வாகன நிறுத்துமிடங்களைக் கண்டறிய குடிமக்களுக்கு காவல் கட்டுப்பாட்டு அறை உதவும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் வசதியே தங்களின் முதன்மையான முன்னுரிமை என்றும், பொதுமக்கள் வாகனங்களை பாலத்தின் மீது நிறுத்த எவ்வித தடையும் இல்லை எனவும் தாம்பரம் மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.