செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 37 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து இன்று காலை 5.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து மத்திய வங்க கடலில் நிலை கொண்டுள்ளது.
இது தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து புதுச்சேரி வடதமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரை ஓரம் அடுத்த இரண்டு தினங்களில் நிலவக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழையை ஒட்டி தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், செங்கல்பட்டு மாவடத்தின் கடலோரப் பகுதிகளான மாமல்லபுரம், செய்யூர், கேளம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக மாமல்லபுரத்தில் 62 மில்லி மீட்டர் மழையும், திருப்போரூரில் 42 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. மதுராந்தகத்தில் 36 மில்லி மீட்டர் மழையும், தாம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 32 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.