தொடர் மழை காரணமாக சதுரகிரி கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள ஓடைகளில், நீர்வரத்து அதிகமாக காணப்படுவதால் பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 4 ஆயிரத்து 500 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த கோயிலுக்கு, கடந்த காலங்களில் தொடர்ந்து பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
ஆனால் 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 10 பக்தர்கள் உயிரிழந்த நிலையில், அமாவாசை, பிரதோஷம் போன்ற விசேஷ நாட்களில் மட்டுமே சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் புரட்டாசி மாத பிரதோஷத்தை ஒட்டி இன்று முதல் 18-ம் தேதி வரை 4 நாட்கள் சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் சதுரகிரி கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள நீரோடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், பக்தர்கள் பாதுகாப்பு கருதி சதுரகிரி கோயிலுக்கு செல்ல வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று பிரதோஷ தினம் என்பதால் பக்தர்கள் வருகையை தடுக்க தாணிப்பாறை விளக்கு பகுதியில் பாதுகாப்புப் பணியில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்