பிராந்திய பாதுகாப்பு, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஆகியவற்றில் உறுப்பு நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தினார்.
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள ஜின்னா மாநாட்டு மையத்தில் 23வது ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு கோலாலகமாக தொடங்கியது. இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் உரையாற்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பொதுவான சவால்களை சமாளிப்பதற்கு உறுப்பு நாடுகளிடையே ஒத்துழைப்பு முக்கியம் என தெரிவித்தார்.
அமைதி மற்றும் வளர்ச்சியை உறுதிப்படுத்த ஒரு கூட்டு அணுகுமுறை அவசியம் என சுட்டிக்காட்டிய அவர், பரஸ்பர மரியாதை மற்றும் இறையாண்மை சமத்துவத்தின் அடிப்படையிலேயே ஒத்துழைப்பு இருக்க வேண்டும் என கூறினார்.
மேலும், பிராந்திய பாதுகாப்பு, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஆகியவற்றில் உறுப்பு நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என குறிப்பிட்ட அவர், பிராந்திய ஒருமைப்பாட்டை அனைவரும் அங்கீகரிக்க வேண்டும் என பாகிஸ்தானை மறைமுகமாக தாக்கி பேசினார்.
முன்னதாக, ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்ற உறுப்பு நாடுகளின் தலைவர்களுடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குழு புகைப்படம் எடுத்து கொண்டார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்கு முன்பாக இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் நடைபயிற்சி மேற்கொண்டார். தூதர அதிகாரிகளுடன் நடைபயிற்சி மேற்கொண்ட அவர், அலுவக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.