சென்னையில் கடந்தாண்டு போன்றே நடப்பாண்டு மழையால் மக்கள் துயரங்களை சந்தித்து வருவது திராவிட மாடல் திமுக அரசின் தோல்வி என இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
சிவகாசியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது :
சென்னையில் கன மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மழையின் போதும் மக்கள் துயரத்தை சந்தித்து வருகின்றனர். மழை என்பது வரம். சென்னை மக்களை பொறுத்தவரை மழை சாபமாக மாறி உள்ளது.
மழை பெய்தால் சென்னையிலே வசிக்க முடியாத சூழல் இருந்து வருகிறது. இதனை சரி செய்வதற்காக சிங்காரச் சென்னை 4000 கோடி ரூபாய் பேக்கேஜ், பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. 70 சதவீதம் 80 சதவீதம் முடிவடைந்து விட்டதாக ஆளும் திமுக அமைச்சர்கள் பேட்டி அளிக்கின்றனர். கடந்தாண்டு ஏற்பட்ட அதே துயரம் இந்த ஆண்டிலும் சந்தித்து வருகிறோம். இது திராவிட மாடல் திமுக அரசின் தோல்வி என அவர் கூறினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்தில் மழை வெள்ளத்தை வேட்டியை மடித்துக் கட்டி மழை வெள்ள பாதிப்பை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து தற்போது முதல்வர் ஸ்டாலினும் மழை வெள்ள பாதிப்பை பார்வையிட்டு வருகிறார். இப்போது அவரது மகனும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.
இதற்கு நிரந்தர தீர்வு தான் என்ன?. மழை பாதிப்புகளை கண்காணிக்க பல்வேறு கமிட்டிகள் அமைக்கப்பட்டு இருக்கிறது. அதற்கான அறிக்கைகள் என்ன ஆனது என்று தெரியவில்லை என அவர் தெரிவித்தார்.