நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 46 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நேற்று பெங்களூரு ஸ்டேடியத்தில் தொடங்கிய நிலையில், முதல்நாள் ஆட்டம் மழையால் தடைபட்டு பின்பு ரத்துசெய்யப்பட்டது.
இந்நிலையில் இரண்டாம் நாளில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முந்தைய நாள் பெய்த மழையின் காரணமாக மைதானம் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமாக அமைந்தது. இதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட நியூசிலாந்து அணி தங்களது விக்கெட் வேட்டையை தொடங்கியது.
முதலாவதாக ரோகித் சர்மா 2 ரன்னில் வெளியேறி விக்கெட் சரிவை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி, சர்பராஸ் கான், கே.எல்.ராகுல், அஸ்வின், ஜடேஜா அனைவரும் ரன் எடுக்காமல் அடுத்தடுத்து வெளியேறி அதிர்ச்சியளித்தனர்.
ரிஷப் பந்த் அதிகபட்சமாக 20 ரன்களும், தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 13 ரன்களும் சேர்த்தனர். இறுதியில் 31 புள்ளி 2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 46 ரன்களை மட்டுமே இந்திய அணி எடுத்தது. ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் இந்திய அணியின் டாப் 7 பேட்ஸ்மேன்களில் 4 பேர் பூஜ்ஜியம் ரன்னில் சொந்த மண்ணில் வெளியேறியது இதுவே முதல் முறையாகும்.