ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்ட நிலையில், சம்பவம் நடைபெற்ற இடத்தில் என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு நடத்தவுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள சோனமார்க் என்னும் இடத்தில், சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அங்கு வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில், ஒரு மருத்துவர் மற்றும் 6 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். தாக்குதலில் படுகாயமடைந்தவர்கள், ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கொல்லப்பட்டவர்களில் பலர், புலம்பெயர் தொழிலாளர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யாரும் தப்ப முடியாது என கூறினார். இந்நிலையில், தாக்குதல் நடைபெற்ற இடத்தில் ஜம்மு காஷ்மீர் பிராந்திய கிளையில் உள்ள என்ஐஏ அதிகாரிகள் பிற்பகலில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர்.
















