முதலமைச்சராக இருந்தபோது அரவிந்த் கெஜ்ரிவால் பல கோடி ரூபாய் செலவிட்டு டெல்லி அரசு இல்லத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பான விவரங்களை பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மால்வியா தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், கெஜ்ரிவால் தனது குளியலறையில் மட்டுமே 10 லட்சம் முதல் 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான தானியங்கி ஸ்மார்ட் கழிவறைகளை நிறுவியது தெரியவந்துள்ளது.
6 கோடி ரூபாய் மதிப்பில் மோட்டார் மூலம் இயக்கப்படும் ஜன்னல் திரைச்சீலைகள் அவரது இல்லத்தில் இருப்பதாகவும், சுமார் 64 லட்சம் ரூபாய் மதிப்பிலான அதிநவீன தொலைக்காட்சிகளையும் பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதுமட்டுமல்லாமல், 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான சோபாக்கள், 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான சமையல் அடுப்புகள் ஆகியவற்றுடன், 15 கோடி ரூபாய் செலவில் சிறந்த குடிநீர் வசதி மற்றும் சுகாதார வசதிகள் அந்த வீட்டில் செய்யப்பட்டிருந்தாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லத்தில் உள்ள ஏ.சி.களின் எண்ணிக்கை, டெல்லியில் அதிக ஆண்டுகள் முதலமைச்சராக பதவி வகித்த ஷீலா தீக்ஷித்தின் இல்லத்தில் இருந்த ஏ.சி.களின் எண்ணிக்கையை விட 3 மடங்கு அதிகம் என்பதும் தெரியவந்துள்ளது.
இதனால், மக்களின் வரிப்பணத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்தாரா அரவிந்த் கெஜ்ரிவால்? என்ற மிகப்பெரிய கேள்வி மக்களின் மனதில் எழுந்துள்ளது.