தஞ்சையில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் வீட்டில் அமலாக்கத்துறையினர் மேற்கொண்ட சோதனை 15 மணி நேரத்திற்கு பிறகு நிறைவு பெற்றது.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும், தற்போதையை ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம், கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை வீட்டுவசதித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.
அந்த சமயத்தில், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கட்ட, வைத்திலிங்கம் 28 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக அறப்போர் இயக்கம் சார்பில் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக லஞ்சஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தஞ்சை, சென்னை உட்பட வைத்திலிங்கம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று சோதனை மேற்கொண்டனர். தஞ்சை தெலுங்கன்குடிகாட்டில் உள்ள வைத்திலிங்கத்தின் வீட்டில் 15-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். காலையில் தொடங்கி 15 மணி நேரம் நடைபெற்ற சோதனை இரவு நிறைவு பெற்றது.
அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை முடித்து கொண்டு வெளியே வந்த போது வைத்திலிங்கத்தின் ஆதரவாளர்கள் அவர்களை முற்றுகையிட்டனர். மேலும், செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து செய்தியாளர்கள் தஞ்சை – பட்டுக்கோட்டை சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, செய்தியாளருக்கு பேட்டியளித்த வைத்திலிங்கம், அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்ட கேள்விக்கு முறையாக பதில் அளித்துள்ளதாகவும், அவர்கள் எந்த ஆவணங்களையும் எடுத்துச் செல்லவில்லை எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில், சென்னையில் தி.நகர், கோடம்பாக்கம், அசோக்நகர் உள்ளிட்ட 6 இடங்களில் வைத்திலிங்கத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2-வது நாளாக சோதனை மேற்கொண்டனர்.
















