ஒவ்வொரு குடிமகனிடத்திலும் வீரம் மற்றும் விடுதலை தாக்கத்தை மருதுபாண்டிய சகோதரர்கள் விதைத்து சென்றதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம் சூட்டியுள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்ட வீரர்களாக பெருமையோடு போற்றப்படுகின்ற மருது பாண்டிய சகோதரர்கள் நினைவு தினம் இன்று. 18-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியின் சுரண்டல் ரீதியிலான வரி விதிப்பு முறைகளை எதிர்த்தும், தொடர்ந்து அவர்கள் இந்தியாவில் நிலைபெறக் கூடாது என்பதற்காகவும், தங்களது வீரம் செறிந்த செயல்பாடுகளால் பல்வேறு போரிட்டு, ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார்கள்.
பாரத தேசத்தின் சுதந்திர வேட்கையை மக்களிடத்தில் புகுத்திய இவர்கள், உலக அரசியலின் புரிதலோடு ‘மக்கள் புரட்சி’ அறிந்தவர்களாக செயல்பட்டார்கள். தேசத்தின் சுதந்திரத்திற்காக, ஒவ்வொரு குடிமகனிடத்திலும் வீரம் மற்றும் விடுதலை தாக்கத்தை விதைத்து சென்ற மாவீரர்களான மருதுபாண்டிய சகோதரர்களின் நினைவு தினத்தில், அவர்களது வீரத் தியாகங்களை போற்றி வணங்குவோம் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.