தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
தேனி பத்திரப்பதிவு அலுவலகத்தில் முறைகேடாக பணம் பெறுவதாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு ஒழிப்புத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் கணக்கில் வராமல் முறைகேடாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோல் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் கணக்கில் வராத ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் நவல்பூரைச் சேர்ந்த ஸ்ரீதேவி ஜெயந்தி என்பவர், கிறிஸ்டியன்பேட்டை தமிழ்நாடு அரசு போக்குவரத்து சோதனைச்சாவடியில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் சோதனைச்சாவடியை கடந்து செல்லும் வாகனங்களுக்கு முறையான பர்மிட் சான்றிதழ் வழங்காமல் லஞ்சம் பெறுவதாக புகார் எழுந்தது. அதைத்தொடர்ந்து அலுவலகம் மற்றும் ஸ்ரீதேவி ஜெயந்தி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 5 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ஒன்றரை லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டது.