தேசியம் எனது உடல், தெய்வீகம் எனது உயிர் என்று உரக்க சொன்னது மட்டுமின்றி , அதே கொள்கையில், கடைசி வரை வாழ்ந்தவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். பதவிகள் நாடாமல், அதிகார பீடங்களை அலங்கரிக்காமல், இன்றைக்குச் சரித்திரத்தில் கோடிக்கணக்கான மக்களின் தெய்வமாக தேவர் திருமகனார் திகழ்கிறார்! அந்த தேசியத் தலைவரைப் பற்றி ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தைச் சேர்ந்த உக்கிரப்பாண்டி தேவர், முருகப் பக்தி மிக்க இந்திராணி தம்பதியருக்கு,1908ம் ஆண்டு,அக்டோபர் 30 ஆம் தேதி, தேவர் திருமகனார் முத்துராமலிங்கத்தேவர் பிறந்தார்.
முத்துராமலிங்க தேவர் 6 மாத கைக்குழந்தையாக இருந்தபோது அவரது தாயார் இந்திராணி இறந்தார். இதனால், பாட்டி பார்வதியம்மாள் அரவணைப்பில் பசும்பொன்னை அடுத்துள்ள கல்லுபட்டி என்ற கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவர் வளர்ந்தார்.
சிறுவயது முதற்கொண்டு நெற்றி நிறைய திருநீறு பூசும் பழக்கம் கொண்ட தேவர் திருமகனார், தன் வாழ்நாள் முழுவதும் கனிவு, வீரம், ஈகை, சகோதரத்துவம் போன்ற நற்குணங்களோடு வாழ்ந்தார். ஜாதி எல்லைகளைக் கடந்த தேவர் திருமகனார், ஒரு இஸ்லாமியத் தாயின் அரவணைப்பில் வளர்ந்தார்.
1937,1938,1939, ஆம் ஆண்டுகளில், தொடர்ந்து தொழிலாளர்கள் போராட்டத்துக்குத் தலைமை தாங்கி, ஜமீன் ஒழிப்பு போராட்டம் உட்பட பல போராட்டங்களை வெற்றிபெறவைத்தார். முதன்முதலில் பெண் தொழிலாளர்களுக்கு, மகப்பேறு காலத்தில் கூலியுடன் கூடிய விடுமுறையை வாங்கித் தந்தவரும் தேவரே ஆவார்.
விவசாயத்தில் பெரும் தரகர்களை ஒழித்து உழவர் சந்தையை முதன் முதலில் தொடங்கியவர் தேவரே ஆவார். உழுதவனுக்கே நிலம் சொந்தம் என்ற அடிப்படையில், தனது சொத்துக்கள் பெரும்பகுதியை விவசாயிகளுக்கே விட்டுக்கொடுத்தார். சுமார் 1832 ஏக்கருக்கும் மேல் பரப்பளவு கொண்ட 32 கிராமங்களை, 16 தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எழுதி கொடுத்து, முதன்முதலில் பொதுவுடமையை செயலில் காட்டினார் தேவர் பெருமகனார்.
இந்தியாவிலே முதல்முறையாக தமிழகத்தில் ‘அரிஜன ஆலயப் பிரவேச உரிமை’ யை நிலைநாட்டியவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவராவார். மதுரை மீனாட்சியம்மன் கோவில் உட்பட பல ஆலயங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள், ஆலய பிரவேசம் செய்வதற்குத் திருமகனாரே காரணம் என்றால் மிகையில்லை.
ஏகாதிபத்திய ஆங்கிலேய அரசால் ரேகை சட்டம் என்னும் குற்றப் பரம்பரை சட்டம் கொண்டுவரப் பட்டது. இந்தியாவில் 89 க்கும் மேற்பட்ட ஜாதிகள் இக்கொடூர சட்டத்தின் கோரப்பிடியில் சிக்கி இருந்தனர். தமிழகத்தில், கள்ளர்கள்,மறவர்கள் உட்பட வேப்பூர் பறையர்களும், படையாட்சிகளும், குரவர்களும் இச்சட்டத்தால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
கைரேகை வைப்பதற்குப் பதிலாக கட்டை விரலை வெட்டிக் கொள்ளுங்கள் என்று தேவர் திருமகனார் முழங்கினார். பசும்பொன் தேவர் மீது வழக்கு பதிவானது. இது சம்பந்தப்பட்ட வழக்கில் கூறப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் தேவர் திருமகனார் மேடைகளில் பேசுவது தடை செய்யப்பட்டது. இது “வாய்பூட்டுச் சட்டம்” என்று அழைக்கப் பட்டது.
இந்த வாய் பூட்டுச் சட்டம், தென்னிந்தியாவில் தேவர் திருமகனாருக்கும், வட இந்தியாவில் லோகமான்ய பாலகங்காதர திலகருக்கும் மட்டும் தான் போடப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது. தேவர் பெருமானாரின் கடும் போராட்டத்தின் விளைவாக, 1947ம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி முதல் குற்றப்பரம்பரைச் சட்டம் முழுமையாக இந்தியாவில் நீக்கப்பட்டது.
1939ம் ஆண்டு ஜூன் 22ம் தேதி பார்வர்ட் பிளாக் கட்சியை தொடங்கிய நேதாஜி, பசும்பொன் தேவர் திருமகனாரை நிறுவன உறுப்பினராக அறிவித்தார். நேதாஜியின் இந்திய ராணுவப் படையில் 40,000 தமிழர்கள் இந்திய விடுதலைக்குப் போராடினர் என்றால் அதற்கு தேவர் திருமகனாரே காரணம். அதனால் தான், மீண்டும் பிறந்தால் ஒரு தமிழனாகப் பிறக்க வேண்டும் என்று நேதாஜி வெளிப்படையாகவே கூறினார்.
1939ம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி, சென்னைக் கடற்கரையில் நடந்த பார்வர்ட் பிளாக் கட்சியின் மாபெரும் பொதுகூட்டத்தில் நேதாஜி, தேவர் திருமகனாரை, கட்சியின் தமிழகத் தலைவராக அறிவித்ததோடு “தென்னாட்டு போஸ்” என்றும் பாராட்டினார். இது தான் நேதாஜி பேசிய கடைசி மேடை பேச்சாகும்.
அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சியில் பணியாற்ற தொடங்கிய முத்துராமலிங்க தேவர் 1952, 1957, மற்றும் 1962 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து 3 முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இந்திய அரசியலில் பெரிய கட்சிகளின் ஆதரவு இல்லாமல் 3 முறை மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டது பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மட்டுமே என்பதுதான் இன்று வரை வரலாறாக உள்ளது.
தனிமனித ஒழுக்கம் வாய்ந்த தலைவராக, பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடித்த ஞானியாக, தூய்மையான துறவு நிலையில் இயங்கிய தலைவராக, வங்கத்துச் சிங்கம் நேதாஜிக்கு நிகரான தலைவராக, எந்த அடக்குமுறைகளுக்கும் அஞ்சாத தென்னாட்டுச் சிங்கமாக வாழ்ந்தவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர்.
20ம் நுாற்றாண்டில், தெய்வீகத்தையும் தேசியத்தையும் ஏற்படுத்தியதோடு மட்டுமின்றி துல்லியமாக அந்த பாதையில் விலகாமல் நடந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மதுரையில் 56 வது வயதில், தனது பிறந்த அந்நாளன்று காலமானார்.