அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் காளிராஜுக்கு எதிரான சொத்துக்குவிப்பு புகாரை 6 மாதங்களில் விசாரித்து முடிக்க, லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரான காளிராஜ் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறையில் கடந்த ஜூலை மாதம் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததை அடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி சேஷசாயி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் புகார் குறித்து ஆரம்ப கட்ட விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், விசாரணைக்கு பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, 6 மாதங்களில் ஆரம்ப கட்ட விசாரணையை முடிக்க உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.