அயோத்தியில் கோலாகலமாக நடைபெற்ற தீபோட்சவ திருவிழா பக்தர்களிடையே பெரும் பரவசத்தை ஏற்படுத்தியது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் 8-வது தீபோட்சவ திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. ராமர் கோயில் திறக்கப்பட்ட பின் கொண்டாடப்படும் முதல் தீபாவளி என்ற அடிப்படையில், சரயு நதிக்கரையோரம் 25 லட்சத்திற்கும் அதிகமான தீபங்களை ஏற்றியும், ஒரே நேரத்தில் ஆயிரத்து 121 பேர் ஆரத்தி எடுத்தும் இரு கின்னஸ் சாதனைகள் நிகழ்த்தப்பட்டன.
அமைச்சர்கள் புடைசூழ இந்நிகழ்வில் பங்கேற்ற உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத், தீபங்களை ஏற்றி தீபோட்சவ நிகழ்வை தொடங்கி வைத்தார்.
பின்னர் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கலைஞர்கள் மூலம் ‘ராம் லீலா’ நாடகமும், அதன் தொடர்ச்சியாக மியான்மர், நேபால், தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட 6 நாடுகளைச் சேர்ந்த நடன கலைஞர்கள் மூலம் கலைநிகழ்ச்சிகளும் நிகழ்த்திக்காட்டப்பட்டது அங்கு கூடியிருந்த பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.
மாநில தகவல் தொழில்நுட்பத்துறையின் சார்பில் நடத்தப்பட்ட பிரம்மாண்ட ‘லேசர் லைட்’ நிகழ்ச்சியில், லேசர் விளக்குகளால் நிகழ்த்தப்பட்ட ராவண வதம் காட்சிகாள் அங்கு கூடியிருந்த பக்தர்கள் மற்றும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
அதன் தொடர்ச்சியாக, விண்ணதிரும் வகையில் நடைபெற்ற வாண வேடிக்கை நிகழ்ச்சிகளை உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பார்வையாளர்கள் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.