சென்னையில் இருந்து போடி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில், மதுரை ரயில் நிலையத்தில் தடம் புரண்டது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 10.30 மணிக்கு போடி நாயக்கனூர் செல்லும் ரயில் புறப்பட்டது. இன்று காலை 8 மணியளவில் மதுரை வந்தடைந்தது. மதுரை ரயில் நிலையத்தின் 5ம் நடைமேடையில் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து ரயில் அங்கிருந்து புறப்பட்ட நிலையில், என்ஜின் அருகேயுள்ள பெட்டியின் ஒரு சக்கரம் தடம் புரண்டது.
தொடர்ந்து தகவலறிந்து அங்கு வந்த ரயில்வே ஊழியர்கள், நீண்ட நேரம் போராடி ரயில் சக்கரத்தை சரி செய்தனர். இதையடுத்து 2 மணி நேர தாமதத்திற்கு பின் போடி ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதனால் தீபாவளியை ஒட்டி அந்த ரயிலில் சொந்த ஊர்களுக்கு பயணித்தவர்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.