இந்தியா, சீனா எல்லையில் இயல்பு நிலை திரும்ப தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதியளித்தார்.
தீபாவளியையொட்டி வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாம் மாநிலம் திஸ்பூர் சென்ற ராஜ்நாத் சிங், ராணுவ வீரர்களுடன் பட்டாசு வெடித்துக் கொண்டாடினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராஜ்நாத் சிங், எல்லையில் சச்சரவுக்குரிய பகுதியில் அமைதியை நிலைநாட்ட இந்தியா, சீனா இடையே தூதரக ரீதியிலும், ராணுவ அளவிலும் பேச்சுவார்த்தை நடைபெற்றதை நினைவுகூர்ந்தார்.
பேச்சுவார்த்தைக்கு பின்னர், எல்லையில் இயல்பு நிலை திரும்ப ஒருமித்த கருத்து ஏற்பட்டதாக கூறிய அவர், பரஸ்பர பாதுகாப்பின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டார். கிழக்கு லடாக்கில் டெப்சாங், டெம்சாக் ஆகிய பகுதிகளில் படைகளை விலக்கிக் கொள்ள இருநாடுகளும் அண்மையில் ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.