சமூக வலைதளங்களில் புகழ்பெற்று விளங்கும் இளம்வயது ஆன்மிக பேச்சாளரான பால் சாந்த் பாபா என்ற அபினவ் அரோராவுக்கு, லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொலை மிரட்டல் விடுத்ததாக, அபினவ் அரோராவின் பெற்றோர் மதுரா காவல் துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர். யார் இந்த அபினவ் அரோரா ? ஏன் அவருக்கு கொலை மிரட்டல் வருகிறது? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
உத்தரபிரதேச மாநிலம் மதுராவை சேர்ந்த பத்து வயதாகும் அபினவ் அரோரா டெல்லியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். அபினவ் அரோரா பிரபல TEDx பேச்சாளர் தருண் ராஜ் அரோராவின் மகனாவார். மிகவும் இளம்வயது ஆன்மீக பேச்சாளராக அறியப்படும், அபினவ் அரோரா சமூக ஊடகங்களில் பிரபலமாக உள்ளார். அபினவ் அரோராவின் இன்ஸ்டாகிராம் பக்கத்துக்கு சுமார் 9 லட்சத்துக்கும் அதிகமான FOLLOWERS உள்ளனர்.
இந்தியாவின் இளைய ஆன்மீக சொற்பொழிவாளர் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரியால் கௌரவிக்கப்பட்டதாக தனது இன்ஸ்டாவில் குறிப்பிட்டிருக்கிறார் அபினவ் அரோரா.
பால் சாந்த்” என்று அன்புடன் அழைக்கப்படும் அபினவ், பலராமராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை தனது தம்பியாக வணங்குவதாக கூறியிருக்கிறார்.
“ராதே ராதே” அல்லது “ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா” போன்ற சொற்றொடர்களுடன் அனைவரையும் வாழ்த்தும் அபினவ் அரோரா, தனது ஆன்மீக பயணம் 3 வயதாக இருக்கும் போதே தொடங்கியதாக
கூறியிருக்கிறார்.
இவரின், இந்து பண்டிகை கொண்டாட்டங்கள், வேதம், உபநிடதங்கள் போன்ற இந்துமத நூல்களை ஓதுதல் மற்றும் இந்துமத மதப் பிரமுகர்களுடனான தொடர்புகளை முன்னிலைப்படுத்தும் வகையிலான ஆன்மீக உள்ளடக்கத்துடன் கூடிய வீடியோ பதிவுகள் பலரை கவர்ந்துள்ளது.
சமீபத்தில், அபினவ் அரோரா மத ஊர்வலம் ஒன்றில் நடனமாடிய வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியது. அபினவ்வின் குருவான சுவாமி ராமபத்ராச்சாரியா அவரை முட்டாள் பையன் என்று சொல்லியிருந்தார். சுவாமி ராமபத்ராச்சாரியா இந்த கண்டன வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.
சுவாமி ராமபத்ராச்சார்யா போன்ற பெரிய குரு தன்னை திட்டியது நாட்டின் மிகப்பெரிய செய்தியாக மாற்றப்படுகிறது ஏன்? என்று கேள்வி எழுப்பிஇருந்த அரோரா, சுவாமி ராமபத்ராச்சார்யா தம்மை ஆசிர்வதித்தார் என்றும் வீடியோ பதிவு வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் தான், அபினவ் அரோராவுக்கு செல்போனில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலிடம் இருந்து கொலை மிரட்டல் வந்துள்ளது.
இதுகுறித்து, அபினவ் அரோராவின் தாயார் ஜோதி அரோரா, தனது மகன் பக்தியை தவிர வேறு எதுவும் செய்யவில்லை. ஆனாலும், தங்கள் குடும்பத்துக்கு அச்சுறுத்தல்கள் வருகின்றனஎன்று கூறியிருக்கிறார்.
மேலும்,லாரன்ஸ் பிஷ்னோய் குழுவில் இருந்து, தொலைபேசியில்,அபினவ்வைக் கொன்றுவிடுவதாக மிரட்டினர் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், தங்களுக்கும் தங்கள் மகனுக்கும் அவமானம் படுத்தும் விதமாக, சமூக ஊடகங்களில் ட்ரோலிங் மற்றும் தனியுரிமை மீறுதல் மற்றும் கொடுமைப்படுத்துதல் ஆகிய குற்றங்களை செய்துவரும் ஏழு யூடியூபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு, மதுராவின் கூடுதல் தலைமை நீதித்துறை நீதிபதியிடம் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தங்களின் மத நம்பிக்கைகளை கேலி மற்றும் அவதூறு செய்யும் வகையில் கொச்சையான வீடியோக்களை யூடியூபர்கள் பதிவேற்றியதாகவும் அபினவ் அரோராவின் தாயார் குற்றம் சாட்டியிருக்கிறார்.
யூடியூபர்களின் செயல்கள் அபினவ் அரோராவுக்கு மிகப்பெரிய மன வேதனையை ஏற்படுத்தியதாக கூறும் அபினவ் குடும்பத்தினர், குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் பகிரங்கமாக கேலி செய்யப்படுவது மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மிக இளம்வயது இந்து ஆன்மீக பேச்சாளருக்கு, கொலை மிரட்டல் குறித்து விசாரணை தொடங்கப் பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.