நடப்பாண்டில், 6 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்களை ஆப்பிள் நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது. அது குறித்த ஒரு செய்தி தொகுப்பு.
Xiaomi, Oppo மற்றும் Vivo போன்ற சீன பிராண்டுகள் ஆதிக்கம் செலுத்தும் இந்தியாவில் ஸ்மார்ட்போன் சந்தையில் ஆப்பிளின் சந்தை பங்கு வெறும் 7 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது.
ஆனாலும், இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதித் துறையின் முதுகெலும்பாக ஆப்பிள் ஐபோன்கள் மாறிவிட்டன. இந்தியாவில் இருந்து, அமெரிக்காவுக்கு ஐபோன்களை ஏற்றுமதி செய்யும் முன்னணி நிறுவனமாக ஆப்பிள் உருவெடுத்துள்ளது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்புவரை, இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி வெறும் 5.2 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடையதாக இருந்தது. ஆப்பிள் இந்தியாவில் தன் உற்பத்தியைத் தொடங்கியதிலிருந்து இந்தியாவின் ஸ்மார்ட் போன் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
மத்திய அரசின் மானியங்கள், திறமையான தொழிலாளர்கள் மற்றும் இந்தியாவின் தொழில்நுட்ப முன்னேற்றம் ஆகியவற்றைப் பயன்படுத்தி, இந்தியாவில் ஆப்பிள் தான் ஐபோன்கள் உற்பத்தியை வேகமாக விரிவுபடுத்தி வருகிறது.
வளர்ந்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் சீனாவிலிருந்து வெளியேறி ஆப்பிள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கிய அங்கமாக இந்தியா மாறியுள்ளது.
Foxconn Technology Group, Pegatron Corp., மற்றும் Tata Electronics ஆகிய நிறுவனங்கள், இந்தியாவில் ஐபோன்களை அசெம்பிள் செய்கின்றன.
குறிப்பாக, இந்தியாவின் மொத்த ஐபோன் ஏற்றுமதியில் 50 சதவீதத்துக்கும் மேல், சென்னைக்கு அருகிலுள்ள Foxconn நிறுவனமே தயாரிக்கிறது.
கடந்த ஆண்டு விஸ்ட்ரான் கார்ப்பரேஷன் நிறுவனத்திடமிருந்து ஐபோன் உற்பத்தி தொழிற்சாலையை வாங்கிய டாடா குழுமம், ஆப்பிள் நிறுவனத்தின் முதன்மை சாதனங்களை அசெம்பிள் செய்யும் முதல் இந்திய நிறுவனமானது.
கடந்த ஆறு மாதங்களில் டாடா குழுமம்,சுமார் 1.7 பில்லியன்அமெரிக்க டாலர் மதிப்பிலான ஐபோன்களை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது.
கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் மட்டும் கிட்டத்தட்ட 6 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்களை ஆப்பிள் நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது.
இது கடந்த ஆண்டு காலத்துடன் ஒப்பிடும்போது மதிப்பில் 33 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிதியாண்டின் இறுதிக்குள் ஆப்பிள் நிறுவனம் சுமார் 10 பில்லியன் அமெரிக்க டாலருக்கு ஐபோன்களை ஏற்றுமதி செய்யும் என்று கணிக்கப் பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஐபோன் 16 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் போன்ற ஐபோன் மாடல்களை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்ய அனுமதி பெற்றுள்ளது ஆப்பிள் நிறுவனம்.
ஏற்கெனவே மும்பை, டெல்லி,புனே ஆகிய மாநகரங்களில் சில்லறை விற்பனை நிலையங்களையும் ஆப்பிள் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு, பெங்களூருவில் புதிய சில்லறை விற்பனை நிலையத்தை திறக்க ஆப்பிள் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவின் வளர்ந்து வரும் ஐபோன் உற்பத்தி, நாட்டின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி நிலப்பரப்பை மறுவடிவமைத்துள்ளது. ஐபோன்களே, இப்போது இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதியில் ஆதிக்கம் செலுத்துகின்றன.