அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபருக்கு இந்துக்கள் மீது அக்கறையில்லை என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டி உள்ளார்.
அமெரிக்காவில் வரும் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ள அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சி சார்பில் கமலா ஹாரிஸும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப்பும் போட்டியிடுகின்றனர்.
இருவருக்கும் இடையே மிகக் கடுமையான போட்டி நிலவிவருகிறது. இந்த நிலையில் தீபாவளியையொட்டி, தனது எக்ஸ் தளத்தில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், உலகம் முழுவதும் உள்ள இந்துக்களை அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளார். தான் ஆட்சியமைத்தால் அமெரிக்காவில் உள்ள இந்துக்களை பாதுகாப்பேன் என்றும் இந்தியாவுடனான உறவை வலுப்படுத்துவேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
வங்கதேசத்தில் ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளுக்கு அவர் கண்டனம் தெரிவித்தார். மேலும், தனது நிர்வாகத்தின்கீழ் வரி ரத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, மிகச்சிறந்த பொருளாதாரமாக அமெரிக்கா கட்டமைக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.