நவம்பர் 1-ம் தேதியையே தமிழ்நாடு நாளாக கொண்டாட வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானும், தமிழ்நாட்டிற்கென ஒரு கொடி வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
மெட்ராஸ் மாகாணம் கடந்த 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி அன்றே மெட்ராஸ், கர்நாடகா, கேரளா, ஆந்திரா என தனித்தனி மாநிலங்களாக பிரிக்கப்பட்டன. பின்னர் 1967-ம் வருடம் ஜூலை 18-ம் தேதி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மெட்ராஸ் என்ற பெயர் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
கடந்த 2019-ம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் நவம்பர் 1-ம் தேதியை தமிழ்நாடு தினமாக அறிவித்தது. பின்னர் ஆட்சிக்கு வந்த திமுக அரசு கடந்த 2021-ம் ஆண்டில், ஜூலை 18-ம் தேதியே தமிழ்நாடு தினமாக கடைபிடிக்கப்படும் என அறிவித்தது.
இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இன்று தமிழ்நாடு தின வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் மட்டும் எல்லைப் போராட்ட தியாகிகள் நாள் என குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.