பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவரான டாக்டர் பிபேக் டெப்ராய் 69வது வயதில் காலமானார். இந்திய நிதி அமைச்சகத்தின் அமிர்த காலத்துக்கான உள்கட்டமைப்பு மற்றும் நிதிக் கட்டமைப்புக்கான வல்லுனர் குழுவின் தலைவராக இருந்த டாக்டர் பிபேக் டெப்ராய் பற்றி ஒரு செய்தி தொகுப்பு.
தொலைநோக்கு பார்வை கொண்ட பொருளாதார நிபுணரான டாக்டர் பிபேக் டெப்ராய், சட்ட திருத்தங்கள் முதல் ரயில்வே சீர்திருத்தங்கள் வரை எல்லா துறைகளிலும் அனைவைரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி குறித்து தீவிரமாக பணியாற்றியவர்.
நுட்பமான நகைச்சுவை உணர்வும், ஈடு இணையற்ற ஞானமும் கொண்ட இந்தியாவின் மிகச்சிறந்த பொருளாதார வல்லுனர்களில் ஒருவராக டாக்டர் பிபேக் டெப்ராய் திகழ்ந்தார்.
தனது பள்ளிப்படிப்பை நரேந்திரபூரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் முடித்த டாக்டர் பிபேக் டெப்ராய், கொல்கத்தாவில் உள்ள பிரெசிடென்சி கல்லூரி, டெல்லி ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ், கேம்ப்ரிட்ஜில் உள்ள ட்ரினிட்டி கல்லூரியில் மேற்படிப்பு முடித்தார்.
பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய டாக்டர் பிபேக் டெப்ராய், 2015ம் ஆண்டு ஜனவரி முதல் 2019 ஜூலை வரை நிதி ஆயோக்கின் உறுப்பினராக இருந்தார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு டாக்டர் பிபேக் டெப்ராய் ஆற்றிய பங்களிப்பைக் கவுரவிக்கும் விதமாக, இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது 2015ம் ஆண்டு வழங்கப்பட்டது. அடுத்தாண்டு, அமெரிக்க- இந்திய வணிக உச்சிமாநாட்டின் வாழ்நாள் சாதனையாளர் விருதும் டாக்டர் பிபேக் டெப்ராய்க்கு வழங்கப்பட்டது.
பொருளாதார விவகாரங்கள் துறையின் ஆலோசகராக இருந்த டாக்டர் பிபேக் டெப்ராய் இந்திய நிதி அமைச்சகம் மற்றும் UNDP மூலமும் பொருளாதாரத் திட்டத்தை உலகமயமாக்குவதற்கான சட்டத்தை சரி செய்தல் மற்றும் சீர்திருத்தங்களில் பணியாற்றினார்.
தேசிய உற்பத்தி கவுன்சில் உறுப்பினராக, ஜார்கண்ட் மாநில வளர்ச்சி திட்டக் குழு தலைவராக, ராஜஸ்தான் முதல்வரின் பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினராக, டாக்டர் பிபேக் டெப்ராய் பணியாற்றியுள்ளார்.
டாக்டர் பிபேக் டெப்ராய்யின் அறிவாற்றலால், மத்திய அரசு மட்டுமல்ல, ஜார்கண்ட் ,ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களும் நல்ல பயனடைந்துள்ளன.
இந்திய இரயில்வே துறையை மறுசீரமைப்பதற்கான குழுவுக்குத் தலைமை தாங்கிய டாக்டர் பிபேக் டெப்ராய் வடிவமைத்த திட்டங்களே வந்தே பாரத் முதல் புல்லட் ரயில் வரை ரயில்வே துறை சாதனை படைத்துள்ளது.
நாட்டின் சில முக்கிய நிதி செய்தித்தாள்களின் ஆலோசனை ஆசிரியராக இருந்த டாக்டர் பிபேக் டெப்ராய், விளையாட்டு கோட்பாடு, பொருளாதாரக் கோட்பாடு, வருமானம் மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகள், வறுமை, சட்டச் சீர்திருத்தங்கள் மற்றும் ரயில்வே சீர்திருத்தங்கள் போன்ற துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்திருக்கிறார்.
இந்திய வேதங்கள், புராணங்கள், இலக்கியங்கள் மகாபாரதம் மற்றும் ராமாயணம் ஆகியவற்றை மரபு மாறாமல், அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்த்ததில் டாக்டர் பிபேக் டெப்ராய் குறிப்பிடத் தக்கவர்.
மகாபாரதம், இராமாயணம் மற்றும் பகவத் கீதை உள்ளிட்ட பல பாரம்பரிய சமஸ்கிருத நூல்களை மொழிபெயர்த்துள்ளார். மேலும், சன்சாத் தொலை காட்சியில் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை நடக்கும் இதிஹாச நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் பணியாற்றி வந்தார் டாக்டர் பிபேக் டெப்ராய்.
பொருளாதாரத்திற்கு அப்பால், குறுங் கவிதைகளையும் டாக்டர் பிபேக் டெப்ராய் எழுதி இருக்கிறார். பல முக்கிய பொருளாதார, அரசியல் மற்றும் சமூக சம்பவங்களைக் கிண்டல் செய்யும் கவிதைகள் அடங்கிய டாக்டர் பிபேக் டெப்ராய்யின் தி புக் ஆஃப் லிமெரிக்ஸ் நூல் பலரின் பாராட்டுக்களைப் பெற்றது.
பொருளாதாரம், வரலாறு,கலாச்சாரம், அரசியல்,இலக்கியம், ஆன்மீகம், என பன்முகத் தன்மை கொண்ட டாக்டர் பிபேக் டெப்ராய் மறைவுக்கு பிரதமர் மோடி உட்பட பல தலைவர்களும், அறிஞர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.