வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அரசின் மீது நம்பிக்கை இல்லாததால் லைப் ஜாக்கெட், ரப்பர் படகு உள்ளிட்ட உபகரணங்களை வாங்கியுள்ளதாக சென்னை வேளச்சேரி பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் மழை பெய்யும் போதெல்லாம் வேளச்சேரியில் உள்ள டான்சி நகர், சீதாராம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்படைகிறது.
இந்நிலையில், அப்பகுதி மக்கள் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரப்பர் படகு, லைப் ஜாக்கெட் உள்ளிட்ட உபகரணங்களை வாங்கியுள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த அப்பகுதி மக்கள், வெள்ள பாதிப்பின் மீது மீட்பு பணிகளுக்கு 40-க்கும் மேற்பட்ட படகுகள் ஈடுபட வேண்டும், ஆனால் மாநகராட்சி நிர்வாகத்திடம் போதிய உபகரணங்கள் இல்லாததால், கடும் இன்னலுக்கு உள்ளாவதாக வேதனை தெரிவித்தனர்.
இதன் காரணமாகவே மாநகராட்சி நிர்வாகத்தை எதிர்பார்க்காமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக தாங்களே படகுகளை வாங்கியதாகவும் தெரிவித்தனர்.