அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப் பின் இஸ்ரேல் மீதான பயங்கர தாக்குதலுக்குத் தயாராகுமாறு தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கு ஈரானின் உச்சத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஏராளமான ட்ரோன்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தி ஈராக்கில் இருந்து தாக்குதல் நடத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும் — ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கும் இடையேயான போர் 12 மாதங்களாக நீடித்து வருகிறது. இதில், ஹமாஸ் தீவிரவாத படையினருக்கு ஆதரவாக ஈரான் செயல்பட்டு வருகிறது. ஈரானின் ஆதரவு பெற்ற லெபனானின் ஹிஸ்புல்லா உள்ளிட்ட தீவிரவாத குழுக்களும் இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலை நடத்தி வருகிறது.
காஸாவில், ஹமாஸ் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், லெபனானில் ஹிஸ்புல்லாவினர் மீதும் கடுமையான வான்வழி மற்றும் தரை வழி தாக்குதல்களை தீவிரப்படுத்தி இருக்கிறது. ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ருல்லா உள்ளிட்ட முக்கிய தலைவர்களைப் படுகொலை செய்த இஸ்ரேல் மீது ஈரான், 200 பாலிஸ்ட்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
இதன் மூலம் இஸ்ரேல்- ஹமாஸ் போரில் ஈரானும் நேரடியாக இறங்கியது. ஈரானின் இந்த தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, கடந்த வாரம் ஈரானின் இராணுவ இலக்குகள் மீதான துல்லியமான தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டது.
இதனை தொடர்ந்து, இருநாடுகளும் பதிலுக்குப் பதில் இராணுவத் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ஈரானையும், இஸ்ரேலையும் வலியுறுத்தி உள்ளன.
இதுவே இரு நாடுகளுக்கும் இடையேயான இறுதி போராக இருக்க வேண்டும் என்றும் மத்திய கிழக்கு பகுதியில் அமைதி ஏற்பட இருநாடுகளும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இஸ்ரேலின் தாக்குதலுக்கு கடுமையான மற்றும் வருந்தத்தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்த ஈரானின் உச்சத் தலைவரின் உயர்மட்ட உதவியாளரான, முகமது முகமதி கோல்பயேகனி, இஸ்ரேலின் தாக்குதலை வெற்றிகரமாக தடுத்த ஈரானின் வான் பாதுகாப்புச் செயல்திறனைப் பாராட்டியுள்ளார்.
இந்நிலையில், ஈரான் உச்ச தலைவர் கொமேனியின் தலைமையில் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உரையாற்றிய ,கொமேனி, இஸ்ரேல் தாக்குதல்களைப் புறக்கணிப்பது என்பது தோல்வியை ஒப்புக்கொள்வதற்கு சமம் என்று கூறியிருக்கிறார். மேலும், அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப் பிறகு, இஸ்ரேல் மீது இராணுவத் தாக்குதல் நடத்த உத்தரவிட்டிருக்கிறார் ஈரானின் உச்சத் தலைவர்.
ஆனால், அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, வரவிருக்கும் நாட்களில் இஸ்ரேலை தாக்க ஈரான் தயாராகி வருவதாக இஸ்ரேல் உளவுத்துறையும் உறுதி படுத்தி இருக்கிறது. ஏராளமான ட்ரோன்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தி இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இதற்கிடையில், இஸ்ரேல் இராணுவவீரர்கள் பட்டமளிப்பு விழாவில் உரை நிகழ்த்திய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரான் அணுசக்தித் திறனைப் பெறுவதைத் தடுப்பதே இஸ்ரேலின் முதன்மையான இலக்கு என்று கூறியிருக்கிறார். மேலும்,முன்னெப்போதையும் விட இன்றைக்கு இஸ்ரேல் வலிமையாக இருப்பதை ஈரான் மறந்து விடக் கூடாது என்றும் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
மீண்டும் ஈரான் இஸ்ரேலைத் தாக்க முடிவெடுத்திருக்கும் நிலையில், மத்திய கிழக்கில் போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.