ராணுவ வலிமையை தொடர்ந்து அதிகரித்து வரும் வட கொரியா, Hwasong-19 ICBM என பெயரிடப்பட்டுள்ள கண்டம் விட்டு கண்டம் பாயும் புதிய ஏவுகணை பரிசோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
சமீப காலமாக வட கொரியா பலவிதமான பாலிஸ்டிக் மற்றும் க்ருஸ் ஏவுகணைகளைச் சோதித்து வருகிறது. குறிப்பாக, ஒலியின் வேகத்தை விட பலமடங்கு வேகத்தில் செல்லக் கூடியதும், மிக குறைந்த உயரத்தில் பறக்க கூடியதும், ரேடார் கண்காணிப்பில் இருந்து தப்பிக்க கூடியதும் ஆன ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் பரிசோதனைகளை வட கொரியா வெற்றிகரமாக நடத்தியது.
கடந்த 2022ம் ஆண்டு ஹவாசாங் 18 திட எரிபொருள் ஏவுகணையை பரிசோதனை செய்தது வட கொரியா. இது திரவ எரிபொருள் ஏவுகணையை விட வேகமாக செல்லக்கூடியதாகும்.
1000 கிலோமீட்டர் வேகத்தில் பறந்ததாக கணிக்கப்படும் இந்த ஏவுகணையின் வீச்சு 15,000 கிலோமீட்டருக்கும் மேல் இருக்கும் என்று அமெரிக்கா மதிப்பிட்டது.
2022ம் ஆண்டு ஜூலை மாதம் வடகொரியா நடத்திய ஹவாசாங் 18 இரண்டாவது பரிசோதனை, 6600 கிலோமீட்டர் உயரத்தில் 74 நிமிடங்கள் வரை நடத்தப்பட்டது.
கடந்த நவம்பர் மாதம் வட கொரிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை, குறுகிய தூர பாதையில் சோதனை செய்தது . இந்த ஏவுகணை அமெரிக்காவின் நிலப்பரப்பை அடைந்திருக்கலாம் என்று ஜப்பான் அரசு அப்போது கருத்து தெரிவித்திருந்தது.
தொடர்ந்து, வட கொரியா 4500 கிலோமீட்டர் சென்று தாக்கும் ஹவாசாங் 12 ஏவுகணையை பரிசோதித்தது. ஜப்பானுக்கு மேல் பறந்த இந்த ஏவுகணை, பசிபிக் கடலில் உள்ள அமெரிக்காவின் குவாம் தீவை குறி வைத்ததாக கூறப்பட்டது.
இதனை தொடர்ந்து 10,000 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கக் கூடிய ஹவாசாங் 14 ஏவுகணை பரிசோதனையை வட கொரியா நடத்தியது. அடுத்து 13,000 கிலோமீட்டர் சென்று தாக்கக் கூடிய ஹவாசாங் 15 ஏவுகணையை சோதனை செய்தது. கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் இந்த ஏவுகணை அமெரிக்காவின் எந்த பகுதியையும் தாக்கி அழிக்கும் சக்தி கொண்டதாகும்.
2017ம் ஆண்டு, அணுகுண்டு சோதனை செய்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிடம் , அனைத்து அணுசக்தி செறிவூட்டல் வசதிகளையும் வட கொரியா அழித்து விடும் என்று உறுதியளித்திருந்தார்.
இந்நிலையில், கண்டம் விட்டு கண்டம் பாயும் புதிய Hwasong-19 ஏவுகணையை வடகொரியா பரிசோதனை செய்துள்ளது.
வட கொரியா, இதுவரை ஏவப்பட்ட வேறு எந்த ஏவுகணையை விடவும், இந்த Hwasong-19 ஏவுகணை ஆற்றல் மிக்கது என கூறப்படுகிறது.
புதிய வகை ICBM, அணுசக்தி பயன்பாட்டு வழிமுறைகளின் வளர்ச்சி மற்றும் உற்பத்தியில் வட கொரியா பெற்றுள்ள மேலாதிக்க நிலையை யாராலும் மாற்ற முடியாது என்பதை உலகின் முன் வட கொரியா நிரூபித்துள்ளது.
வடகொரியாவின் பாதுகாப்பு கருதியும், தங்கள் நாட்டின் எதிரிகளுக்கு எச்சரிக்கை விடும் விதமாகவும் இந்த சோதனை நடத்தப்பட்டதாக, தெரிவித்துள்ள வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், நாட்டின் அணுசக்தி தாக்குதல் திறனை மீண்டும் நிரூபித்த வட கொரிய ஆயுத விஞ்ஞானிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழக் கிழமை, ஐசிபிஎம்- Hwasong-19 ஏவுகணை பியோங்யாங்கிற்கு அருகில் இருந்து வடகிழக்கு நோக்கி ஏவப்பட்டதாகவும், ஹொக்கைடோவின் ஒகுஷிரி தீவுக்கு மேற்கே ஜப்பானின் பிரத்யேக பொருளாதார மண்டலத்துக்கு வெளியே விழுந்ததாகவும், ஜப்பான் ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வடகொரியாவின் ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களின் வளர்ச்சி உலகில் அமைதி மற்றும் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் அமைந்திருப்பதாக ஜப்பான் ராணுவ அமைச்சர் ஜெனரல் நகாதானி தெரிவித்திருக்கிறார்.
மேலும், கொரிய தீபகற்பத்தின் அமைதியை அச்சுறுத்தும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு வட கொரியாவை வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், ஏவுகணை மற்றும் அணுசக்தி வளர்ச்சிக்கு பங்களித்ததற்காகவும், சட்டவிரோத வெளிநாட்டு நிதிகளை, தங்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பியதற்காகவும், 11 வட கொரியர்கள் மற்றும் நான்கு வட கொரிய நிறுவனங்கள் மீதும் புதிய பொருளாதாரத் தடைகளைத் தென் கொரிய அரசு விதித்துள்ளது.
வட கொரியாவின் இந்த ஏவுகணை சோதனையில் ரஷ்யாவின் பங்கு இருந்ததற்கான எந்த அறிகுறியும் இருப்பதாக தெரியவில்லை என்று, அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் குறிப்பிட்டுள்ளார்.
2006ம் ஆண்டு தொடங்கி, இன்று வரை ஆறு அணு ஆயுத சோதனைகளையும் நடத்தியுள்ள வட கொரியாவின் Hwasong-19 ஏவுகணை, கனமான மற்றும் பல அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.