சபரிமலையில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு சீசனையொட்டி பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் மீண்டும் ஸ்பாட் புக்கிங் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மகர விளக்கு மற்றும் மண்டல பூஜை சீசனில் லட்சக்கணக்கான பக்தர்களை மாலை அணிந்து வந்து ஐயப்ப தரிசனம் செய்கின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா காரணமாக ஐயப்ப பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து ஐயப்பன் கோயிலுக்கு வருவது கட்டாயமாக்கப்பட்டது.
அதன்பின்னர் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த ஆன்லைனில் பதிவு செய்வதும், அதிகமான கூட்ட நேரங்களில் குறிப்பிட்ட அளவு நேரடியாக பதிவு செய்யும் வசதியும் அமல்படுத்தப்பட்டது.
அந்த வகையில் இந்த மகர விளக்கு சீசனுக்கும் நேரடி ஸ்பாட் புக்கிங் வசதி மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. பம்பை, எருமேலி, பீர்மேடு ஆகிய இடங்களில் ஸ்பாட் புக்கிங் மையங்கள் செயல்படும்.
ஸ்பாட் புக்கிங் மூலம் பத்தாயிரம் பக்தர்களை அனுமதிக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. நாள்தோறும் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் 70 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.