டெல்லியில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை காரணமாகவே, தீபாவளியன்று இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதன் பின்னணி என்ன? இதுபற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்…
பதறவைக்கும் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம்தான்… கிழக்கு டெல்லியின் ஃபர்ஸ் பஜார் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்திற்கு, கொண்டாட்டத்துடனும், குதூகலத்துடனும் தொடங்கிய தீபாவளி தினத்தை, கருப்பு தினமாக மாற்றியமைத்தது. ஆகாஷ் சர்மா என்பவரின் வீட்டு முன்பு துப்பாக்கியுடன் வந்த இருவர், உள்ளேயிருந்த 40 வயதான ஆகாஷையும், 16 வயதுடைய அவரது மருமகன் ரிஷப்பையும் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றதே அதற்கு காரணம்.
எதிர்பாராத விதமாக நடந்த இந்த கொடூர தாக்குதலில் ஆகாஷ் சர்மாவின் 13 வயது மகன் கிரிஷும், பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் வீட்டிற்குள் இருந்த ஆகாஷ் சர்மாவிடம் ஆசி பெறுவதுபோல் அருகில் சென்று, தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அவரை சரமாரியாக சுட்டனர். அப்போது அங்கிருந்த ஆகாஷின் மருமகன் ரிஷப் அவர்களை தடுக்க முயல, ரிஷப்பையும் அவர்களின் துப்பாக்கியில் இருந்து வெளிவந்த குண்டுகள் துளைத்தன.
இருவர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக தகவல் அறிந்து வந்த டெல்லி போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டபோதே இந்த சம்பவத்தின் பின்னணி குறித்த விவரங்கள் ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு வந்தன. இந்த இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாக 18 வயதுக்கு குறைவான சிறுவன் ஒருவனை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் 70 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் இந்த இரட்டைக் கொலை சம்பவம் அரங்கேறியது போலீசாருக்கு தெரியவந்தது.
ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வந்த ஆகாஷ் சர்மாவிடம், அவரது தூரத்து உறவினர் மகனான சிறுவன் அடியாளாக பணியாற்றி வந்ததும், சமீபத்தில் அந்த சிறுவனுக்கு கொடுக்கப்பட்ட பணிக்கு 70 ஆயிரம் ரூபாய் கூலி தருவதாக ஆகாஷ் சர்மா வாக்களித்திருந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. பணியை முடித்தபின் பலமுறை கேட்டும் அந்த பணத்தை கொடுக்காமல் ஆகாஷ் சர்மா தட்டிக் கழித்து வந்ததால், ஆத்திரமடைந்த சிறுவன் தனது கூட்டாளியுடன் சேர்ந்து அவரை கொலை செய்ய திட்டமிட்டு தீர்த்துக்கட்டியதும் போலீசாருக்கு தெரியவந்தது.
தான் வகுத்த கொலை திட்டத்தை அரங்கேற்ற தனது கூட்டாளிக்கு, ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் கொடுத்து அழைத்து வந்ததாக கைதான சிறுவன் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளான்.
ஆகாஷ் சர்மா தனது உயிருக்கு ஆபத்து இருப்பதை முன்பே உணர்ந்திருந்ததையும், அதனால் அவர் வெளியில் நடமாடுவதை பெரும்பாலும் குறைத்துக்கொண்டதையும் போலீசார் விசாரணையில் கண்டறிந்தனர். தீபாவளி பண்டிகையின்போது வெடிக்கப்பட்ட பட்டாசுகளின் சத்தம், அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தாதது குற்றவாளிகளுக்கு சாதகமாக அமைந்துவிட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
கொல்லப்பட்ட ஆகாஷ் சர்மா மீது மோசடி, கூட்டு பாலியல், ஆட்கடத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட பல குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக டெல்லி போலீசார் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல கொல்லப்பட்ட ரிஷப்பின் தந்தை மீது 14 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதையும் போலீசார் உறுதிபடுத்தியுள்ளனர். கைதான சிறுவனின் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக உள்ள மற்றொரு குற்றவாளியை தேடி வருகின்றனர்.