கந்த சஷ்டியையொட்டி, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கனிப்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் கந்த சஷ்டி கடந்த 2ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதையொட்டி, லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து வருகின்றனர்.
தொடர்ந்து ஏழு நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் நான்காம் நாளில் கோயில் சண்முக விலாஸ் மண்டபத்தில் கனிப்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
கனிப்பந்தலில் ஆப்பிள், அண்ணாச்சி, மாதுளை, வாழை, ஆரஞ்சு உள்ளிட்ட பழங்கள் கட்டப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு கனிப்பந்தலில் உள்ள பழங்கள் பிரசாதமாக வழங்கப்படுகின்றன. அதை உட்கொள்ளும் பக்தர்களுக்கு வேண்டிய வரங்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது.