அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குச் சீட்டில் ஆங்கிலம் தவிர மேலும் நான்கு மொழிகள் இடம்பெற்றுள்ளன. இந்த நான்கு மொழிகளில், ஒன்றாக இடம் பிடித்த ஒரே இந்திய மொழி பெங்காலி மட்டுமே. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்கு சீட்டில், இந்தியாவின் பிற மொழிகள் இடம் பெறாமல், பெங்காலி மொழி இடம் பெற்றதன் பின்னணி என்ன ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
அமெரிக்காவின் 47-வது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சியின் வேட்பாளரான துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கும், குடியரசுக் கட்சியின் வேட்பாளரான முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இருவருக்கும் மக்கள் செல்வாக்கு ஏறக்குறைய சரி சமமாகவே உள்ளது. எனவே யார் அமெரிக்காவின் அடுத்த அதிபர் ? என்பது கணிக்க முடியாமலேயே இருக்கிறது.
அமெரிக்காவில் வாக்குச் சீட்டு முறையில் தான் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில், நியூ யார்க் வாக்காளர்களுக்கு மட்டும் வாக்கு சீட்டில், ஆங்கிலம் தவிர மேலும் நான்கு மொழிகள் அச்சிடப் பட்டுள்ளன. பொதுவாகவே, பன்முக கலாச்சாரங்களின் உறைவிடமாக விளங்கும் நியூயார்க், உருகும் பானை என்று அழைக்கப் படும்.
நியூயார்க்கில் சுமார் 200க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன என்று நகர திட்டமிடல் துறை தெரிவித்துள்ளது. இந்த பன்முகத்தன்மையை மனதில் வைத்து, நியூயார்க் நகர தேர்தல் வாரியத்தின் நிர்வாக இயக்குனர் மைக்கேல் ஜே ரியான், ஆசிய மொழிகளை வாக்குச்சீட்டில் சேர்த்திருக்கிறார்.
எனவே, வாக்குச்சீட்டில், ஆங்கிலத்துடன், சீனமொழி, ஸ்பெயின் மொழி, கொரிய மொழி மற்றும் இந்திய மொழியும் இடம்பெற்றுள்ளது. ஆனால், அமெரிக்க வாக்கு சீட்டில், இடம்பிடித்த இந்திய மொழி பெங்காலி என்பது தான் ஆச்சரியம்.
நியூயார்க்கில் வசிக்கும் புலம்பெயர்ந்தவர்களில் 66 சதவீதம் பேருக்கு ஆங்கிலம் முதல் மொழியாக இல்லை என்றும், நகரில் உள்ள ஆசிய அமெரிக்கர்களில் 45 சதவீதம் பேர் ஆங்கிலத்தில் மிக குறைந்த புலமையே பெற்றுள்ளனர் என்றும், ஆசிய அமெரிக்கன் கூட்டமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது.
இந்தியாவின் தேசிய மொழியாக இந்தி இருந்தாலும், இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய இரு நாடுகளிலிருந்தும் ஏராளமான பெங்காலி மொழி பேசும் மக்களே நியூயார்க்கில் அதிகம் உள்ளனர்.
ஆசிய அமெரிக்கன் ஃபெடரேஷனின் 2022 கட்டுரையின்படி, நியூ யார்க்கில், 53.6 சதவீத மக்கள் சீன மொழி பேசுகின்றனர். நியூயார்க்கில் 12.2 சதவீத மக்கள் பெங்காலிமொழி பேசுகின்றனர். நியூயார்க்கில் 3.3 சதவீத மக்களே இந்தி மொழி பேசுகின்றனர். இதன் படி, பெங்காலியே நியூ யார்க்கில் அதிகம் பேசப்படும் இரண்டாவது ஆசிய மொழியாகும். இந்த பட்டியலில் இந்த மொழி ஆறாவது இடத்தில் உள்ளது.
இதன் காரணமாகவே, வாக்காளர் பங்கேற்பை அதிகரிக்க, நியூயார்க் வாக்குச்சீட்டில் பெங்காலி மொழி சேர்க்கப்பட்டுள்ளது. முன்னதாக,1965 ஆம் ஆண்டு வாக்களிக்கும் உரிமைச் சட்டத்தின் கீழ், தெற்காசிய சிறுபான்மை மக்களும் வாக்களிக்க உதவியாக மொழி விருப்பத்தைக் கட்டாயமாக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, 2013 ஆம் ஆண்டு நியூ யார்க்கின் குயின்ஸ் பகுதியில் பெங்காலி மொழி வாக்குச்சீட்டுகளில் முதன்முதலில் பயன்படுத்த பட்டது. நியூ யார்க்கில் வாழும் இந்தியர்கள், தேர்தலில் வாக்களிக்க இந்த நடவடிக்கை உதவுகிறது என்று இந்திய சங்க கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் அவினாஷ் குப்தா தெரிவித்துள்ளார்.