வன்னியர் சங்க தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் புவனகிரியில் பிரபல கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில், வன்னியர் சங்க மாநில தலைவர் பு.தா.அருள்மொழிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கொலை மிரட்டலை கண்டித்தும், சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய வலியுறுத்தியும், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா அருகே மாநில செயலாளர் வைத்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜிடம் மனு அளிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் பவானியில் வன்னியர் சங்கம் மற்றும் பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, வன்னியர் சங்க தலைவருக்கு, கொலை மிரட்டல் விடுத்த நபர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதனிடையே, அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி, 100 -க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட வன்னியர் சங்கத்தின் சார்பில் ஒசூர் தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பாமக மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது,போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
வன்னியர் சங்க தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி, சேலம் வன்னியர் சங்கம் மற்றும் பாமக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. சேலம் மாநகர் மாவட்டம் சார்பில் சூரமங்கலம் காவல் துணை ஆணையர் மற்றும் ஆய்வாளர் ஆகியோரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.