அமெரிக்காவின் துணை அதிபராக ஜேடி வான்ஸ் தேர்வாகியுள்ள நிலையில், அவரது மனைவியும், ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவருமான உஷா சிலுக்குரி வான்ஸ், அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணியாக பணியாற்றும் பெருமையைப் பெறுகிறார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு…
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், வரலாறு காணாத வெற்றி பெற்று மீண்டும் அதிபராகியுள்ளார் டொனால்ட் ட்ரம்ப். தனக்கு துணையாக, குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 39 வயதான ஜேடி வான்ஸை ட்ரம்ப் தேர்வு செய்திருந்தார்.
ஓஹியோவின் மிடில்டவுனில் பிறந்து வளர்ந்த ஜேடி வான்ஸ், கடற்படையில் சேர்ந்து, சிறிது காலம் ஈராக்கில் பணியாற்றினார். பின்னர் ஓஹியோ மாநில பல்கலைக்கழகம் மற்றும் யேல் சட்டப் பள்ளியில் பட்டம் பெற்றார். மேலும், சிலிக்கான் பள்ளத்தாக்கில் துணிச்சல் மிக்க முதலீட்டாளராகவும் இருந்தார்.
2016 ஆம் ஆண்டு, டிரம்ப் முதன்முதலில் அதிபர் பதவிக்கு போட்டியிடும் நேரத்தில்,’“Hillbilly Elegy: A Memoir of a Family and Culture in Crisis என்ற புத்தகத்தை ஜேடி வான்ஸ் வெளியிட்டு தனக்கென ஒரு பெயரை உருவாக்கினார்.
சுய சரிதையாக இருந்தாலும் இந்நூல், அமெரிக்காவின் ஏழை மற்றும் வெள்ளை சமூகங்களைப் பீடித்திருக்கும் வறுமை மற்றும் அடிமைத்தனம் பற்றி பேசியது. மத்திய அமெரிக்காவில், குறிப்பாக தொழிலாளர் வர்க்கம், கிராமப்புற வெள்ளை வாக்காளர்கள் ஆதரவுடன் ட்ரம்ப் அதிபராக இந்நூல் பெரும் பங்காற்றியது. இந்நூல், NET FLIX இல் திரைப்படமாகவும் வெளியானது.
இம்முறை, டிரம்பின் துணை அதிபராக வான்ஸ் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட மறுநாளே, அந்த படம் நெட்ஃபிளிக்ஸின் முதல் 10 படங்களில் 6வது இடத்தைப் பிடித்தது. நெட்ஃபிளிக்ஸில் இதற்கான யு.எஸ் பார்வையாளர்களின் எண்ணிக்கை 1,180 சதவீதத்துக்கும் அதிகமானது.
2016 ஆம் ஆண்டு டிரம்பை “ஆபத்தானவர்” மற்றும் “தகுதியற்றவர்” என்று அழைத்த ஜேடி வான்ஸ் , 2021 ஆம் ஆண்டு முதல் டிரம்புக்கு ஆதரவாளராக மாறினார். 2023ல் ஓஹியோவின் செனட்டராக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் வான்ஸ், ட்ரம்பின் கொள்கைகளைப் பாதுகாத்தார்.
அமெரிக்காவின் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் ஜேடி வான்ஸின் மனைவி உஷா சிலுக்குரி வான்ஸ், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவராவார். இந்து மதத்தை சேர்ந்த உஷா சிலுக்குரியின் பெற்றோர் கலிபோர்னியாவின் சாண்டியாகோவில் குடிபெயர்ந்தவர்கள்.
38 வயதான உஷா சிலுக்குரியின் தாயார் ஒரு பயாலஜிஸ்ட் ஆவார். அவர் சாண்டியாகோவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றுகிறார். உஷாவின் தந்தை ஒரு பொறியாளர்.
யேல் பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் இளங்கலைப் பட்டமும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதுகலை தத்துவப் பட்டமும் பெற்றுள்ளார் உஷா. யேல் சட்டப் பள்ளியில் படிக்கும்போது ஜே.டி.வான்ஸை உஷா சந்தித்தார். இருவரும் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
வான்ஸுகாக முதலில் கிறிஸ்தவ முறைப்படியும் பின்னர் உஷாவுக்காக இந்து முறைப்படியும் என இவர்களின் திருமணம் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்றது.
6 வயதில் இவான் என்ற மகனும், 4 வயதில் விவேக் என்ற மகனும் மற்றும் 2 வயதில் மிராபெல் என்ற மகள் என 3 குழந்தைகள் வான்ஸ்- உஷா தம்பதிக்கு உள்ளனர். இந்திய பாரம்பரியத்தில் வாழும் தன் மனைவி உஷா, தன் உயிர் வழிகாட்டி என்று ஜேடி வான்ஸ் பெருமையுடன் பல மேடைகளில் கூறியிருக்கிறார்.
உஷா வான்ஸின் சட்ட அறிவு மற்றும் இந்திய பாரம்பரிய பண்பாடு காரணமாக, இனி அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.