தேர்தலில் வெற்றி பெறுவதற்காக நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வாரி வழங்கியதால் காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள், மோசமான நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இலவசங்களால் கர்நாடக அரசின் நிதிநிலை எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது ? என்பது பற்றி பார்ப்போம்.
கடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு, தேர்தல் வாக்குறுதிகளில் அக்கட்சி அளித்த இலவசங்கள் முக்கியப் பங்கு வகித்தன எனக் கூறப்பட்டது.
மக்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற, முதல்வர் சித்தராமையா தலைமையிலான கர்நாடக அரசு பல்வேறு துறைகளின் கீழ் க்ருஹ லட்சுமி, க்ருஹ ஜோதி, சக்தி மற்றும் யுவநிதி என நான்கு திட்டங்களை அறிமுகப்படுத்தியது. ஏற்கனவே உள்ள அன்னபாக்யா திட்டத்தையும் சேர்த்து, மொத்தம் ஐந்து இலவசத் திட்டங்களைக் கர்நாடகாவின் காங்கிரஸ் அரசு செயல்படுத்த தொடங்கியது.
நடப்பு நிதியாண்டில் மாநில பட்ஜெட்டில், இந்த இலவச திட்டங்களுக்காக 53 ஆயிரத்து 674 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது, முந்தைய ஆண்டின் மதிப்பீட்டை விட 47 சதவீதம் அதிகமாகும். மொத்த இலவச திட்டங்களுக்கான ஒதுக்கீட்டில், பாதிக்கு மேல் க்ருஹ லட்சுமி திட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத் தலைவர்களுக்கு மாதந்தோறும் 2,000 ரூபாய் வழங்குவதே க்ருஹ லட்சுமி திட்டமாகும்.
இந்தத் திட்டத்துக்காக மட்டும் கர்நாடக அரசு 28,608 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இது சமூக நலன் மற்றும் ஊட்டச்சத்துக்கான மொத்த மதிப்பிடப்பட்ட செலவில் ஆறில் மூன்று சதவீதமாகும். கர்நாடக அரசு, பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தை வழங்கும் சக்தி திட்டத்துக்கு 5,015 கோடி ரூபாயும், அன்னபாக்யா திட்டத்துக்கு 9,744 கோடி ரூபாயும் ஒதுக்கியுள்ளது.
இந்த நிதியாண்டுக்கான கர்நாடகாவின் வருவாய் பற்றாக்குறை 27,354 கோடி ரூபாயாகும். இது மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதமாகும். காங்கிரஸ் ஆட்சியின் இலவச அறிவிப்புக்களால், இந்த வருவாய் பற்றாக்குறை மேலும் கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
2024-2025ம் ஆண்டுக்கான நிதிப் பற்றாக்குறை 82,981 கோடி ரூபாயாக உள்ளது. இது மொத்த மாநிலத்தின் உள்நாட்டு உற்பத்தியில் 2.95 சதவீதம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டை விட 2.7 சதவீதம் அதிகமாகும்.
கர்நாடகா 2004ம் ஆண்டில் வருவாய் பற்றாக்குறையே இல்லாமல் இருந்தது. அதன்பின் மேலும் அதே ஆண்டு, வருவாய் உபரியாகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில், கர்நாடக மாநிலத்தின் நிலுவையில் உள்ள கடன் மாநில உள்நாட்டு உற்பத்தியில் 24 சதவீதமாகும். இதுவும் சென்ற ஆண்டை விட அதிகமாகும்.
கர்நாடக அரசுக்கு நிலுவையில் உள்ள மொத்த கடன்களில் பொதுக் கடனின் பங்கு மட்டும் மூன்று ஆணடுகளுக்கு முன் 75 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டு பொதுக்கடனின் பங்கு 78 சதவீதமாக ஆக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சூழலில், அரசு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கர்நாடக துணை முதல்வர் சிவகுமார், ‘டிக்கெட் எடுக்க தங்களுக்கு பொருளாதார வசதி உள்ளது. இலவச டிக்கெட் வேண்டாம்’ என சில மாணவியர் இ – மெயில் மற்றும் ‘எக்ஸ்’ வலைதளம் வழியாக கருத்து தெரிவிக்கின்றனர். எனவே சக்தி திட்டத்தை மறு பரிசீலனை செய்வது குறித்து, முதல்வருடன் ஆலோசிக்கப்படும் என்று பேசியிருந்தார்.
இதற்கிடையே, பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சட்டப்பேரவைத் தேர்தலில் நிதி ஆதாரத்துக்கு மீறி அதிக வாக்குறுதிகளை அளிக்க வேண்டாம் என்று எச்சரித்திருந்தார்.
இதன் மூலம், ஜனநாயகத்துக்கு எதிராக மக்களைத் தவறாக வழிநடத்தியதை காங்கிரஸ் முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, காங்கிரசை முழுமையாக அம்பலப்படுத்தும் விதமாக, பிரதமர் மோடி, நவம்பர் ஒன்றாம் தேதி முதல், காங்கிரஸ் கட்சியின் போலி வாக்குறுதிகளை மையமாக வைத்து தொடர் ட்வீட்களை வெளியிட்டுள்ளார்.
கர்நாடகாவில் மட்டுமின்றி, இமாச்சல பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலும் இலவச பேருந்து பயணம், இலவச மின்சாரம், மாதாந்திர ஓய்வூதியம் என பல இலவசங்களை வாக்குறுதியாக தந்து காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது.
ஆட்சியை கைப்பற்றிய காங்கிரஸ், இப்போது வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திணறி வருகிறது. இமாச்சலப் பிரதேசத்தில், நிதிப் பற்றாக்குறையால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை வழங்க முடியாத நிலையில் இருக்கிறது.
காங்கிரஸ் அளித்த வாக்குறுதிப்படி, கடன் தள்ளுபடிக்காக இன்னும் தெலுங்கானா விவசாயிகள் காத்திருக்கின்றனர். இதற்கு முன்பும், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை ஆட்சி செய்த ஐந்தாண்டுகளில் காங்கிரஸ் நிறைவேற்றவில்லை.