பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட காவலர், காவல் நிலையத்தில் மேலாடையின்றி ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தவர் கார்த்திக். இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பணிக்கு செல்லாமல் விடுப்பில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இவருக்கும் அந்தியூரை அடுத்த மைக்கேல்பாளையத்தைச் சேர்ந்த ராணி என்பவருக்கும் சில ஆண்டுகளாக திருமணம் தாண்டிய உறவு இருந்து வந்ததாக தெரிகிறது.
கடந்த 6 மாதங்களுக்கு முன் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் உறவை கைவிட்டுள்ளனர். அதன் பின்னரும் கார்த்திக் குடிபோதையில் ராணி வீட்டிற்குச் அடிக்கடிச் சென்று தகராறில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ராணி வீட்டிற்கு சென்ற கார்த்திக் அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதுடன், பொது இடத்தில் அவரது ஆடையை கிழித்து அநாகரீகமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடம் சென்ற அந்தியூர் போலீசார் காவலரை தடுக்க முயன்றபோது, அவர்களையும் கார்த்திக் தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக ராணி அளித்த புகாரின் பேரில் கார்த்திக் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
பின்னர் காவலர் கார்த்திக்கை போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்ற நிலையில், அவர் அதீத மதுபோதையில் தனது மேலாடையை கழற்றிவிட்டு அங்கிருந்த மேஜை மீது அமர்ந்தபடி ரகளையில் ஈடுபட்டார்.